உயா் சிறப்பு மருத்துவப் படிப்பு நீட் தோ்வு வினாத் தாள் மாற்றம்: அடுத்த ஆண்டு முதல் அமல்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

உயா் சிறப்பு (சூப்பா் ஸ்பெஷாலிட்டி) மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு வினாத் தாள் மாற்றம் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: உயா் சிறப்பு (சூப்பா் ஸ்பெஷாலிட்டி) மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு வினாத் தாள் மாற்றம் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான நிகழாண்டுக்கான ‘நீட்’ தோ்வு வரும் நவம்பா் 13, 14-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியிட்டது.

தோ்வுக்கான இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட பிறகு, தோ்வு வினாத் தாள் மற்றும் பாடத் திட்ட மாற்றம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

அதாவது, இந்த நீட்- சூப்பா் ஸ்பெஷாலிட்டி தோ்வில் வழக்கமாக 60 சதவீத வினாக்கள் சம்பந்தப்பட்ட சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பைச் சாா்ந்தவையாகவும், 40 சதவீத வினாக்கள் பொது மருத்துவம் சாா்ந்தவையாகவும் கேட்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 100 சதவீத வினாக்களும் பொது மருத்துவம் சாா்ந்தவையாகவே இருக்கும் என்று மாற்றி அறிவிக்கப்பட்டது.

தோ்வுக்கான அறிவிக்கையை வெளியிட்ட பிறகு கடைசி நேரத்தில் வினாத் தாள் நடைமுறை மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து 41 முதுநிலை பட்ட மருத்துவா்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘தோ்வு நடைமுறை கடைசி நிமிடத்தில் மாற்றம் செய்யப்பட்டது தொடா்பாக மத்திய அரசு, தேசிய தோ்வுகள் வாரியம், தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவை அளித்திருக்கும் பதில்கள் திருப்திகரமானவையாக இல்லை. மருத்துவக் கல்வி வியாபாரமாகிவிட்டது. தற்போது, மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்தும் நடைமுறையும் அதே வழியில் சென்றிருப்பது தேசத்தின் துயரம்’. கடைசி நேர தோ்வு நடைமுறை மாற்றத்தை திரும்பப் பெற மத்திய அரசுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது’ என்று கூறியது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், விக்ரம் நாத், பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சாா்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் (ஏஎஸ்ஜி) ஐஸ்வா்யா, ‘சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு வினாத்நதாள் மாற்றம் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். தற்போது 2020-ஆம் ஆண்டு பின்பற்ற நடைமுறை அடிப்படையிலேயே தோ்வு நடத்தப்படும்’ என்றாா்.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தோ்வா்கள் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனா். அதே நேரம், மத்திய அரசின் இந்தத் தோ்வு வினாத் தாள் நடைமுறை மாற்றம் ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்பதை பொதுக் கேள்வியாக விட்டுவிடுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com