பிஎம்-கேர்ஸ் திட்டம்: கரோனாவால் பெற்றோரை இழந்த 845 குழந்தைகள் தகுதி

கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளில் 845 பேர் "பிஎம்-கேர்ஸ்' திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற தகுதி பெற்றுள்ளனர் என்று மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை கூறினார்.


புது தில்லி: கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளில் 845 பேர் "பிஎம்-கேர்ஸ்' திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற தகுதி பெற்றுள்ளனர் என்று மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை கூறினார்.
கரோனா பாதிப்பில் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ. 10 லட்சம் வைப்பு நிதியாக செலுத்தப்படும். பின்னர், 18 வயதிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த வைப்பு நிதியிலிருந்து உதவித் தொகை வழங்கப்படும். பயனாளி 23 வயதை எட்டும்போது, தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த பயன்பாட்டுக்காக மொத்தப் பணமும் வழங்கப்படும்.
10 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு அருகிலுள்ள கேந்திரிய வித்யாலயம் அல்லது தனியார் பள்ளிகளில் சேர்க்கை வழங்கப்படும். தனியார் பள்ளியில் சேர்க்கப்படும்போது, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து கல்விக் கட்டணம் செலுத்தப்படும். இதுதவிர, சீருடை, பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட செலவுகளையும் பி.எம்.கேர்ஸ் ஏற்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு உதவிகளை மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்துக்கான வழிகாட்டுதலை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டது. 
அதன்படி, இந்தத் திட்டத்துக்கு மத்திய அளவில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒருங்கிணைப்பு அமைச்சகமாக செயல்படும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அல்லது சமூக நீதித் துறை ஒருங்கிணைப்புத் துறையாக செயல்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ், குழந்தைகளின் பாதுகாவலர்களாக மாவட்ட ஆட்சியர்கள் செயல்படுவர். குழந்தைகள் நலக் குழுக்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவுகளின் உதவியுடன் தகுதியான குழந்தைகளை மாவட்ட ஆட்சியர்கள் அடையாளம் கண்டு, பி.எம்.கேர்ஸ் வலைதளத்தில் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற இதுவரை 3,000-க்கும் அதிகமான குழந்தைகள் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 3,915 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 845 குழந்தைகள் தகுதி பெற்றுள்ளனர். இப்போது இந்தக் குழந்தைகளுக்கு மாத உதவித் தொகையாக ரூ. 2,000 வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன் இந்த உதவித் தொகை ரூ. 4,000-ஆக உயர்த்தப்படும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com