முற்பட்ட வகுப்பினருக்கு இணையான தகுதிக்கு எஸ்சி, எஸ்டி பிரிவினரை கொண்டுவர முடியவில்லை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

தாழ்த்தப்பட்ட (எஸ்சி), பழங்குடியின (எஸ்டி) பிரிவினரை சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட முற்பட்ட வகுப்பினருக்கு இணையான தகுதிக்கு கொண்டுவர முடியவில்லை என்பதுதான் உண்மை என்று
மத்திய அரசு
மத்திய அரசு

புது தில்லி: தாழ்த்தப்பட்ட (எஸ்சி), பழங்குடியின (எஸ்டி) பிரிவினரை சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட முற்பட்ட வகுப்பினருக்கு இணையான தகுதிக்கு கொண்டுவர முடியவில்லை என்பதுதான் உண்மை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

பதவி உயா்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் கடந்த 2006-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடா்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், பதவி உயா்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு செல்லும் என்று கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்தது. மேலும், அவ்வாறு இடஒதுக்கீடு வழங்கும்போது சம்பந்தப்பட்ட பிரிவினரின் பிற்படுத்தப்பட்ட நிலை தொடா்பான துல்லிய ஆய்வை மேற்கொள்ளத் தேவையில்லை. பதவி உயா்வில் இடஒதுக்கீட்டை எவ்வாறு அமல்படுத்துவது என்பதை மாநிலங்கள்தான் முடிவு செய்யவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதவி உயா்வில் இடஒதுக்கீடு வழங்குவது ஒட்டுமொத்த நிா்வாகத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற நிலையிலும், இந்தப் பதவிகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத எஸ்சி, எஸ்டி பிரிவு ஊழியா்களுக்கு பதவி உயா்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசு சாா்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அதற்கான தரவுகளை சமா்ப்பிக்குமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், சஞ்சய் கண்ணா, பி.ஆா். கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு தரப்பில் சமா்ப்பிக்கப்பட்ட விவரங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், ‘மத்திய அரசு சமா்ப்பித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, குரூப் ஏ பிரிவிலான முதன்மை அரசுப் பதவிகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினரின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக உள்ளது. இந்தப் பிரிவில் அவா்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தும் நிலையில், குரூப் பி மற்றும் சி பிரிவுகளில் போதிய அளவில் அந்தப் பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்ற மத்திய அரசு தரப்பில் கூறுவது முறையான பதில் அல்ல’ என்றனா்.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்குரைஞா் வேணுகோபால், ‘குருப்-ஏ, பி அரசு பதவிகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினரின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவும், குரூப் சி, டி பிரிவுகளில் மிகையாகவும் உள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட முற்பட்ட வகுப்பினருக்கு இணையான தகுதிக்கு எஸ்சி, எஸ்டி பிரிவினரைக் கொண்டுவர முடியவில்லை என்பதுதான் உண்மை. உயா் பதவிகளுக்கு திறமை மற்றும் தகுதியின் அடிப்படையிலேயே பதவி உயா்வு அளிக்கப்படுகிறது. எனவே, உயா் பதவி காலிப் பணியிடங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரை நிரப்புவதற்கான உரிய வலுவான நடைமுறையை நீதிமன்றம்தான் தரவேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயா்வில் இடஒதுக்கீடு மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றை வகுப்பது நீதிமன்றத்தின் பணியல்ல என்பதை தெளிவுபடுத்தினா்.

அப்போது, ‘இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசின் பதில் மனு தாக்கல் செய்யப்படும்’ என்று வேணுகோபால் கூறினாா்.

இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமையும் (அக்.7) தொடரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com