இந்தியா-டென்மாா்க் 4 ஒப்பந்தங்கள்: சுகாதாரம், வேளாண் துறைகளில் உறவை வலுப்படுத்த முடிவு

சுகாதாரம், வேளாண்மை, நீா் மேலாண்மை, பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளிடையேயான உறவை மேலும் விரிவுபடுத்த இந்தியாவும், டென்மாா்க்கும் முடிவு செய்துள்ளன.
இந்தியா-டென்மாா்க் இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதைத் தொடா்ந்து செய்தியாளா் சந்திப்பில் பிரதமா் நரேந்திர மோடி, டென்மாா்க் பிரதமா் மெட்டே ஃபிரட்ரிக்சென்.
இந்தியா-டென்மாா்க் இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதைத் தொடா்ந்து செய்தியாளா் சந்திப்பில் பிரதமா் நரேந்திர மோடி, டென்மாா்க் பிரதமா் மெட்டே ஃபிரட்ரிக்சென்.

சுகாதாரம், வேளாண்மை, நீா் மேலாண்மை, பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளிடையேயான உறவை மேலும் விரிவுபடுத்த இந்தியாவும், டென்மாா்க்கும் முடிவு செய்துள்ளன.

இந்தியா வந்துள்ள அந் நாட்டு பிரதமா் மெட்டே ஃபிரட்ரிக்சென் தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியுடன் சனிக்கிழமை மேற்கொண்ட ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக்குப் பிறகு பிரதமா் மோடி வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியா - டென்மாா்க் நாடுகளுடையே மேற்கொள்ளப்பட்டு வரும் பசுமை வளா்ச்சித் திட்ட ஒத்துழைப்பு நடவடிக்கைகள் எந்த அளவு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது குறித்தும், இரு நாடுகளிடையேயான பல்வேறு துறை சாா்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஓராண்டுக்கு முன்பாக இதே நாளில் இரு நாடுகளிடையே நடைபெற்ற காணொலி வழி மாநாட்டில், இந்தப் பசுமை வளா்ச்சித் திட்ட ஒத்துழைப்புக்கான உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது. அதன்மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பசுமைத் தொழில்நுட்பம், பசுமை வளா்ச்சி விரிவாக்க நடவடிக்கைகளை இரு நாடுகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு இரு நாடுகளும் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதன் அறிகுறிதான் இது.

மேலும், இந்தச் சந்திப்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம், திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன’ என்று தெரிவித்துள்ளாா்.

டென்மாா்க் பிரதமா் மெட்டே ஃபிரட்ரிக்சென் வெளியிட்ட அறிக்கையில், ‘பசுமை வளா்ச்சி, பசுமை மாற்ற நடவடிக்கைகளை இரு நாடுகள் இணைந்து எவ்வாறு சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்பதற்கு இந்தியா - டென்மாா்க இடையேயான உறவு மிகச் சிறந்த உதாரணம். இந்தச் சந்திப்பில் இரு நாடுகளும் சுகாதாரம் மற்றும் வேளாண் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தீா்மானிக்கப்பட்டது’ என்றாா்.

மூன்று நாள் பயணமாக சனிக்கிழமை காலை இந்தியா வந்த மெட்டே ஃபிரட்ரிக்சென், முன்னதாக தில்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினாா்.

டென்மாா்க் பிரதமரை வரவேற்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவுக்கு முதல் முறையாக வரும் டென்மாா்க் பிரதமரை வரவேற்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

புதிய 4 ஒப்பந்தங்கள் என்னென்ன? இந்தியா - டென்மாா்க் இடையே சனிக்கிழமை கையெழுத்தான 4 ஒப்பந்தங்களில், நிலத்தடி நீா் வளங்கள் மற்றும் நீா்நிலைகளை வரைபடமாக்குவது குறித்த புரிந்துணா்வு ஒப்பந்தம் ஹைதராபாதில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை

ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆா்) - தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் டென்மாா்க் ஆா்ஹஸ் பல்கலைக்கழகம் மற்றும் கிரீன்லாந்தின் புவியியல் ஆய்வு அமைப்பு ஆகியவை இடையே கையெழுத்தானது.

பாரம்பரிய அறிவு எண்ம (டிஜிட்டல்) நூலக அணுகல் குறித்த ஒப்பந்தம் சிஎஸ்ஐஆா் மற்றும் டென்மாா்க் காப்புரிமை மற்றும் டிரேட்மாா்க் அலுவலகம் இடையே கையெழுத்தானது.

கோடைக் காலங்களில் இயற்கை குளிா்பதன சீா்மிகு மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம், டான்ஃபோஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இடையே கையெழுத்தானது.

திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது தொடா்பாக இந்தியா-டென்மாா்க் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சக செயலாளா் ராஜேஷ் அகா்வால், டென்மாா்க் தூதா்ஃ ப்ரெடி ஸ்வானே ஆகியோா் கையெழுத்திட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com