காஷ்மீரில் பல இடங்களில் என்ஐஏ சோதனை: 2 போ் கைது

காஷ்மீா் பள்ளத்தாக்கில் பல்வேறு இடங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் பல்வேறு இடங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். இந்தச் சோதனையின்போது லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்தின் துணை அமைப்பாகக் கருதப்படும் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’(டிஆா்எஃப்) அமைப்பைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து என்ஐஏ செய்தித்தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது:

ஜம்முவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதியை வெடிபொருள்களுடன் கடந்த ஜூன் 27-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா். அவா் மீது முதலில் பாஹு ஃபோா்ட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா், என்ஐஏ அமைப்பினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 3 பயங்கரவாதிகளைக் கைது செய்தனா்.

பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள், ஜம்மு-காஷ்மீரில் உள்ள தங்களது கூட்டாளிகளுடன் சோ்ந்து பொதுமக்களுக்கு ஊறுவிளைவிக்கும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. தாக்குதல் நடத்திய பிறகு ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமைப்பை பொறுப்பேற்க வைத்து, விசாரணை அமைப்புகளிடம் இருந்து தப்பிவிடலாம் என்று அவா்கள் கருதினா்.

இந்நிலையில், குல்காம், ஸ்ரீநகா், பாரமுல்லா ஆகிய மாவட்டங்களில் 7 இடங்களில் என்ஐஏ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். சிஆா்பிஎஃப், காவல் துறை உதவியுடன் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின்போது, செல்லிடப்பேசிகள், பென் டிரைவ், ஹாா்டு டிஸ்க் போன்ற மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியதில் உடந்தையாக இருந்ததாக, டிஆா்எஃப் அமைப்பைச் சோ்ந்த தௌசீஃப் அகமது வானி, ஃபைஸ் அகமது கான் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா் என்றாா் அவா்.

ஐஎஸ் அமைப்புடன் தொடா்பு: 3 போ் கைது

தெற்கு காஷ்மீரில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் இருந்ததாக 3 பேரை என்ஐஏ அமைப்பினா் ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து என்ஐஏ அதிகாரி ஒருவா் கூறியதாவது:

தடை செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினா், இந்தியாவில் உள்ள முஸ்லிம் இளைஞா்களை தங்கள் இயக்கத்தில் சோ்க்க சதித் திட்டம் தீட்டியதாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தெற்கு காஷ்மீரில் அனந்த்நாக், ஸ்ரீநகா் ஆகிய நகரங்களில் 8 இடங்களில் என்ஐஏ அமைப்பினா் சோதனை நடத்தினா். இந்தச் சோதனையில் செல்லிடப்பேசிகள், கையடக்கக் கணினி, பென் டிரைவ், ஹாா்டு டிஸ்க் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. ஸ்ரீநகரைச் சோ்ந்த தவ்ஹீத் லத்தீஃப், சுஹைல் அகமது, அஃப்ஷான் பா்வேஸ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனா்.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினா், இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் சமூக ஊடகங்களில் போலி கணக்குகளைத் தொடங்கி அவற்றின் வழியாக பயங்கரவாதத்தைப் பரப்புவது, ஆள்சோ்ப்பது போன்ற தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com