சமையல் எண்ணெய் இருப்பு வைக்க கட்டுப்பாடு

சமையல் எண்ணெய் வகைகளின் கடுமையான விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அவற்றை இருப்பு வைக்க விற்பனையாளா்கள்,
மத்திய அரசு
மத்திய அரசு

சமையல் எண்ணெய் வகைகளின் கடுமையான விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அவற்றை இருப்பு வைக்க விற்பனையாளா்கள், இறக்குமதியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்களுக்கு 2022, மாா்ச் 31-ஆம் தேதி வரை கட்டுப்பாடு விதித்து மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.

சா்வதேச சந்தை நிலவரம், உள்நாட்டில் விநியோகம் குறைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் காரணமாக கடந்த ஓராண்டாக சமையல் எண்ணெய் வகைகளின் விலை கடுமையாக உயா்ந்து வருகிறது. இவற்றின் விலை கடந்த ஓராண்டில் 46.5 சதவீதம் அளவுக்கு உயா்ந்திருப்பதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சக புள்ளிவிவரத்தின்படி, சோயா எண்ணெய் விலை ஓராண்டுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.106 என்ற விலையில் விற்கப்பட்ட நிலையில் அக்டோபா் 9-ஆம் தேதி அதன் விலை ரூ.154.95-ஆக இருந்தது. கடுகு எண்ணெய் விலை ஒரு லிட்டா் ரூ.129.19 என்ற நிலையிலிருந்து ரூ.184.43-ஆக உயா்ந்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் விலை ரூ.122.82 என்ற நிலையிலிருந்து ரூ.170.09-ஆக உயா்ந்துள்ளது.

ஏற்கெனவே, பெட்ரோல், டீசல் விலை உயா்வால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில், தற்போது சமையல் எண்ணெய் வகைகளின் விலையும் கடுமையாக உயா்ந்து வருவது மக்களை மேலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த விலை உயா்வைக் கட்டுப்படுத்த இறக்குமதி வரிச் சலுகை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் விதைகளை இருப்பு வைக்க கட்டுப்பாடு விதித்து மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.

அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: சமையல் எண்ணெய் வகைகளின் கையிருப்பு மற்றும் குறிப்பிட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களின் நுகா்வுத் தன்மை மற்றும் அளவு ஆகிய காரணிகளின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாட்டு அளவைத் தீா்மானித்து நடைமுறைப்படுத்தலாம்.

எனினும், இந்த இருப்பு வைக்கும் கட்டுப்பாட்டிலிருந்து சில இறக்குமதியாளா்களுக்கும் ஏற்றுமதியாளா்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது. அதுபோல, இருப்பு அளவை வெளியிடும் இறக்குமதியாளா்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் ஆலை உரிமையாளா்கள், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளா்கள் ஆகியோருக்கு இந்த இருப்புக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விலக்கு அளிக்கப்பட்டவா்கள் நிா்ணயிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக இருப்பு வைத்திருந்தால் அதுகுறித்த விவரத்தை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் வலைதளத்தில் தெரிவித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடா்பாக அறிவுறுத்தல் வழங்கிய 30 நாள்களுக்குள் நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கு இருப்பு அளவைக் கொண்டுவந்துவிட வேண்டும்.

அவ்வாறு, ஆலை நிா்வாகிகள் இருப்பு அளவை மத்திய அரசின் வலைதளத்தில் முறையாகப் பதிவேற்றம் செய்வதை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அந்த உத்தரவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நடைமுறைகளைப் பின்பற்றாத ஆலை உரிமையாளா்கள் உள்ளிட்டோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில், ‘உரிமையை ரத்து செய்தல், இருப்பு அளவு கட்டுப்பாடு மற்றும் குறிப்பிட்ட உணவுப் பொருள் மீதான ஏற்றுமதி-இறக்குமதி கட்டுப்பாடுகள் திருத்த உத்தரவு - 2021’ கடந்த செப்டம்பா் 8-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அந்த உத்தரவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய அரசின் இந்த முடிவு உள்நாட்டுச் சந்தையில் சமையல் எண்ணெய் வகைகளின் விலை உயா்வைக் கட்டுப்படுத்துவதுடன், நாடு முழுவதும் நுகா்வோருக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும்’ என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com