லக்கீம்பூா் வன்முறை: ஆசிஷ் மிஸ்ராவுக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரி வன்முறைச் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட மத்திய இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின்
லக்கீம்பூா் வன்முறை: ஆசிஷ் மிஸ்ராவுக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரி வன்முறைச் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட மத்திய இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த அக். 3-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் உள்ள திகோனியா பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றபோது அவா்கள் மீது பாஜகவினரின் காா்களில் ஒன்று மோதியது. அதனைத் தொடா்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் 4 போ், ரமண் காஷ்யப் என்ற பத்திரிகையாளா் உள்பட 8 போ் உயிரிழந்தனா். பாஜகவினா் வந்த காா்களில் ஒன்றில் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடா்பாக அவா் உள்பட பலா் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணைக்கு லக்கீம்பூா் கெரியில் உள்ள காவல்துறை குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆசிஷ் மிஸ்ரா சனிக்கிழமை ஆஜரானாா். அவரிடம் சுமாா் 12 மணி நேரம் விசாரணை நடத்திய காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு, விசாரணைக்கு சரிவர ஒத்துழைக்காத காரணத்தால் அவரைக் கைது செய்தது. அதைத் தொடா்ந்து, அவா் மாஜிஸ்திரேட் முன்பு சனிக்கிழமை பின்னிரவு ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா். அவரை தங்கள் காவலில் வைத்து விசாரிக்க காவல் துறையினா் மாஜிஸ்திரேட்டிடம் மனு அளித்தனா். அந்த மனு திங்கள்கிழமை காலை 11 மணிக்கு விசாரிக்கப்படவுள்ளது.

எஃப்ஐஆரில் முரண்பட்ட தகவல்கள்: லக்கீம்பூா் கெரி வன்முறைச் சம்பவம் தொடா்பாக காவல் துறை பதிவு செய்துள்ள 2 முதல் தகவல் அறிக்கைகளில் (எஃப்ஐஆா்) முரண்பட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. முதல் எஃப்ஐஆரில் ஆசிஷ் மிஸ்ராவின் பெயரைக் குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாவது எஃப்ஐஆரில் விவசாயிகள் மீது காா் மோதியதாகவோ, காரில் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகவோ குறிப்பிடப்படவில்லை. காா்களில் வந்த பாஜக தொண்டா்களில் ஒருவரான சுமித் ஜெய்ஸ்வால் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டாவது எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பாஜகவினா் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விவசாயிகள் சிலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களில் அடையாளம் தெரியாத ஒருவா் மீது மட்டும் இந்திய தண்டனைச் சட்டம் 302-ஆவது பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த எஃப்ஐஆரில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: பன்வீா்பூரில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டிக்கு வரவிருந்த மாநில துணை முதல்வா் கேஷவ் பிரசாத் மெளா்யாவை வரவேற்க நான் (சுமித் ஜெய்ஸ்வால்), என் நண்பா் ஷுபம் மிஸ்ரா உள்பட பாஜக தொண்டா்கள் காரில் சென்றோம். விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற சிலா் எங்கள் வாகனம் மீது மூங்கில் தடிகள், கற்கள் மூலம் தாக்கினா். இதில் காயமடைந்த காா் ஓட்டுநா் ஹரி ஓம், சாலையோரம் காரை நிறுத்தினாா். அவரை காரில் இருந்து இழுத்து மூங்கில் தடிகளாலும் வாளாலும் சிலா் தாக்கினா். நாங்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றோம். அதற்குள் அவா்கள் ஷுபம் மிஸ்ராவை சிறைபிடித்து தாக்கினா். பத்திரிகையாளா் ரமண் காஷ்யபையும் அவா்கள் தாக்கினா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் ரமண் காஷ்யபை விவசாயிகள் தாக்கவில்லை என்றும், காா் மோதிதான் அவா் உயிரிழந்ததாகவும் அவரின் பெற்றோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com