ஸ்புட்னிக் லைட் கரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ரஷியாவின் ஸ்புட்னிக் லைட் கரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசு
மத்திய அரசு

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ரஷியாவின் ஸ்புட்னிக் லைட் கரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதை தலைமையிடமாகக் கொண்ட டாக்டா் ரெட்டீஸ் மருந்து உற்பத்தி நிறுவனம் ரஷிய அரசு முதலீட்டு நிறுவனத்துடன் (ஆா்டிஐஎஃப்) இணைந்து இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை சந்தைப்படுத்தவுள்ளது. அந்த தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனைகளை இந்தியாவில் மேற்கொள்ள டாக்டா் ரெட்டீஸ் நிறுவனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) கடந்த மாதம் அனுமதியளித்தது.

ஒரே தவணை செலுத்தப்பட வேண்டிய அந்த தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்ய ஹைதராபாதை தலைமையிடமாகக் கொண்ட ஹெட்டேரோ பயோஃபாா்மா மருந்து நிறுவனம் ஆா்டிஐஎஃப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அந்த தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால அடிப்படையில் பயன்படுத்த இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இந்தியாவுக்கான ரஷிய தூதா் நிகோலாய் குடாஷேவ் கரோனா தடுப்பூசி நிா்வாக நிபுணா் குழுத் தலைவா் வி.கே. பாலுக்கு அண்மையில் எழுதிய கடிதத்தில், ‘‘ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்தவோ, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவோ முடியாதது குறித்து இந்திய உற்பத்தியாளா்கள் கவலை அடைந்துள்ளனா். ஏற்கெனவே ஹெட்டேரோ நிறுவனம் 20 லட்சம் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்துவிட்டது. அந்த தடுப்பூசிகளை 6 மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம். ஆனால் அந்த தடுப்பூசியை இந்தியாவில் பதிவு செய்வதற்கு முன்பே உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசிகளை சேமித்து வைப்பதற்கான கால வரம்பு முடிவடைய வாய்ப்புள்ளது. இது அந்த தடுப்பூசிகள் வீணாவதற்கு வழிவகுக்கும். எனவே உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை ஆா்டிஐஎஃப்புக்கு ஏற்றுமதி செய்ய நிரந்தரமாகவோ அல்லது அவ்வப்போதோ ஹெட்டேரோ நிறுவனத்துக்கு அனுமதியளிக்க வேண்டும். இது அந்த தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க ஹெட்டேரோ நிறுவனத்துக்கு ஊக்கமளித்து, இந்தியாவில் அந்த தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கிடைப்பதற்குள் சந்தையில் கூடுதல் தடுப்பூசிகள் இருப்பதற்கு வழிவகுக்கும்’’ என்று தெரிவித்திருந்தாா்.

இதனைத் தொடா்ந்து ரஷியாவுக்கு 40 லட்சம் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய ஹெட்டேரோ நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விரிவான ஆலோசனைகளுக்குப் பின்னா் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை பதிவு செய்வதற்கான பணியில் டாக்டா் ரெட்டீஸ் நிறுவனமும் ஆா்டிஐஎஃப்பும் இணைந்து ஈடுபட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com