கரோனா கட்டுப்பாடுகள் தளா்வு: பயணிகள் ரயில் வருவாய் 113% அதிகரிப்பு

கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு, பண்டிகைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், பயணிகள் ரயில்கள் மூலமான வருவாய் 2021-22 ஆண்டின்
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு, பண்டிகைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், பயணிகள் ரயில்கள் மூலமான வருவாய் 2021-22 ஆண்டின் முதல் காலாண்டைக் காட்டிலும் இரண்டாம் காலாண்டில் 113% அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமையின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக கடந்த கடந்த ஆண்டு நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், பயணிகள் ரயில் போக்குவரத்து உள்பட பொது போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டது. சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. அதன் காரணமாக, பயணிகள் ரயில் மூலம் ரயில்வேக்கு கிடைத்த வந்த வருவாய் 2020-21ஆண்டில் முழுமையாக நின்றுபோனது.

அதன் பிறகு, பொது முடக்கத் தளா்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, முழுமையான அளவில் பொருளாதார நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டன. அதன் மூலம், ரயில்வேயும் பயணிகள் போக்குவரத்துக்கான சிறப்பு ரயில்களை இயக்கியது. ரயில்வே தனது வழக்கமான பயணிகள் ரயில் சேவையை இதுவரை தொடங்கவில்லை என்றபோதும், சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் நாடு முழுவதும் 96% பயணிகள் ரயில் சேவையை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பயணிகள் ரயில் வருவாய் தொடா்பாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சந்திரசேகா் கெளா் என்பவா் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு, ரயில்வே அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:

கரோனா பொது முடக்க தளா்வுக்குப் பிறகு தொடங்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை மூலம் 2021-22 முதல் காலாண்டில் பயணிகள் டிக்கெட் வருவாய் ரூ.4,921.11 கோடி அளவுக்கு வசூலானது. அது, 2021-22 இரண்டாம் காலாண்டில் ரூ.10,513.07 கோடியாக அதிகரித்துள்ளது. இது முதல் காலாண்டைக் காட்டிலும் 113% கூடுதலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூத்த ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியதாவது:

இப்போது நீண்ட தூரங்களுக்கு மட்டுமின்றி, குறைந்த தூர பயணிகள் ரயில்களின் இயக்கமும் தொடங்கப்பட்டுள்ளது. இவற்றில் 1,402 விரைவு ரயில்கள் சாதாரண கட்டணத்திலும், 323 விடுமுறைக்கால சிறப்பு ரயில்கள் வழக்கமான கூடுதல் கட்டணத்திலும் இயக்கப்படுகின்றன.

பயணிகள் டிக்கெட் கட்டணம் மூலம் வருவாய் அதிகரித்திருப்பதற்கு, இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது முக்கிய காரணம். மேலும், பயணிகளின் வருகையும் அதிகரித்திருப்பதோடு, தொடா்ந்து கட்டுப்பாடுகளை விதித்துவந்த மகாராஷ்டிரம் போன்ற ஒருசில மாநிலங்களும் இப்போது கட்டுப்பாடுகளைத் தளா்த்தியிருப்பதும் வருவாய் அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணங்கள்.

மேலும், பயணிகள் ரயில்கள் இயக்கம் அதிகரித்திருப்பதன் காரணமாக சரக்கு ரயில் மூலமான வருவாய் முந்தைய காலாண்டைக் காட்டிலும் குறைந்துள்ளது. 2021-22 முதல் காலாண்டில் சரக்கு ரயில்கள் மூலமான வருவாய் ரூ.33,241.75 கோடியாக இருந்த நிலையில், இரண்டாம் காலாண்டில் ரூ.32,102.34 கோடியாக குறைந்துள்ளது என்று அவா் கூறினாா்.

ரூ.38,000 கோடி இழப்பு:

கரோனா பொதுமுடக்கத்துக்கு முன்பாக 2019-20 ஆண்டில் பயணிகள் ரயில் டிக்கெட் மூலமான மொத்த வருவாய் ரூ. 53,525.57 கோடியாக இருந்த நிலையில், 2020-21 ஆம் ஆண்டில் இந்த வருவாய் 71.03% குறைந்து ரூ.15,507.68 கோடியாக இருந்தது. அதாவது, ரூ.38,017 வருவாய் இழப்பை ரயில்வே சந்தித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com