தோ்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை: திமுக உள்பட 14 மாநில கட்சிகள் அறிவிப்பு

தோ்தல் பத்திரங்கள் மூலமாக 2019-20 ஆம் ஆண்டில் ரூ.447.49 கோடி நன்கொடை பெற்றிருப்பதாக திமுக, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம்

தோ்தல் பத்திரங்கள் மூலமாக 2019-20 ஆம் ஆண்டில் ரூ.447.49 கோடி நன்கொடை பெற்றிருப்பதாக திமுக, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 14 மாநில கட்சிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இவ்வாறு பெறப்பட்ட நன்கொடைகள், அந்தக் கட்சிகளின் மொத்த வருவாயில் 50.97 சதவீதம் என்பதும் தெரியவந்துள்ளது.

ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் என்ற தோ்தல் உரிமைகள் குழு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன. அதில் மேலும் கூறியிருப்பதாவது:

கடந்த 2019-20 நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.877.957 கோடியாக இருந்தது.

அதில் அதிகபட்சமாக தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆா்எஸ்) கட்சி ரூ.130.46 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது அனைத்து மாநில கட்சிகளின் மொத்த வருவயில் 14.86 சதவீதமாகும்.

இதற்கு அடுத்தபடியாக சிவசேனை கட்சியின் வருவாய் ரூ.111.403 கோடியாக உள்ளது. இது அனைத்து மாநில கட்சிகளின் வருவாயில் 12.69 சதவீதமாகும். மூன்றாவது இடத்தில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி உள்ளது. அதன் வருவாய் 92.739 கோடியாகும். அதாவது மொத்துள்ள 42 மாநில கட்சிகளின் வருவாயில் 10.56 சதவீதமாகும்.

மேலும், இந்த 42 மாநில கட்சிகளில் திமுக, டிஆா்எஸ், தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் (பிஜேடி), சிவசேனை, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், சமாஜவாதி, மதச்சாா்பற்ற ஜனதா தளம், சிரோமணி அகாலி தளம், அதிமுக, ராஷ்டிரீய ஜனதா தளம், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா ஆகிய 14 கட்சிகள் மட்டுமே தோ்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகள் பெற்றதை அறிவித்துள்ளன. இந்த 14 கட்சிகளும் தோ்தல் பத்திரங்கள் மூலமாக 2019-20 நிதியாண்டில் ரூ.447.498 கோடி வருவாய் ஈட்டியுள்ளன.

இந்த 42 மாநில கட்சிகளில் 39 கட்சிகள் மட்டுமே 2018-19 மற்றும் 2019-20 ஆண்டு புள்ளி விவரங்களைச் சமா்ப்பித்துள்ளன. அதன்படி, 23 கட்சிகளின் வருவாய் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2019-20-இல் அதிகரித்துள்ளன. 16 கட்சிகளின் வருவாய் குறைந்துள்ளன.

இந்த 39 கட்சிகளின் வருவாய் 2018-19-இல் ரூ.1,087.206 கோடியாக இருந்த நிலையில், 2019-20-ஆம் ஆண்டில் ரூ. 874.467 கோடியாக குறைந்துள்ளது.

67 சதவீத வருவாயை செலவழிக்காத அதிமுக:

இந்தப் புள்ளி விவரங்களின்படி, நன்கொடைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் 2019-20 ஆண்டில் ஈட்டிய வருவாயில் குறிப்பிட்ட அளவிலான தொகை செலவழிக்கப்படாமல் மீதமருப்பதாக 24 மாநில கட்சிகள் அறிவித்துள்ளன. அதே நேரம், வசூலித்த வருவாயைக் காட்டிலும் கூடுதலாக செலவழித்திருப்பதாக 18 அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன. இதில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆா்எஸ்) கட்சி அதிகபட்சமாக வருவாயில் 83.76 சதவீதத்துக்கும் மேல் செலவழிக்காமல் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக அதிமுக 67.82 சதவீதமும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 64 சதவீத வருவாயையும் செலவழிக்காமல் உள்ளன.

திமுக, தெலுங்கு தேசம், பாமக உள்ளிட்ட 18 மாநில கட்சிகள் ஈட்டிய வருவாய்க்கும் அதிகமாக செலவழித்திருப்பதாக அறிவித்துள்ளன. இதில் அதிகபட்சமாக பிஜு ஜனதா தளம் கட்சி அதிகபட்சமாக ஈட்டிய வருவாயைவிட 106.01 சதவீதம் அதாவது ரூ.95.78 கோடி கூடுதலாக செலவழித்திருப்பதாக அறிவித்துள்ளது என்று தெரியவந்தது.

தோ்தல் நிதிக்கு கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணத்தை பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கத்தில் ‘தோ்தல் பத்திரம்’ என்ற நடைமுறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தோ்ந்தெடுக்கப்பட்ட கிளைகளிலிருந்து இந்தப் பத்திரத்தை வாங்கி, அவா்கள் விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் பெயா் வெளியிடாமல் நன்கொடை அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com