லக்கீம்பூா் விவகாரம்: ஆசிஷ் மிஸ்ராவுக்கு 3 நாள் விசாரணைக் காவல்

லக்கீம்பூா் வன்முறை தொடா்பாகக் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

லக்கீம்பூா் வன்முறை தொடா்பாகக் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தர பிரதேசத்தின் லக்கீம்பூா் கெரி பகுதியில் விவசாயிகள் கடந்த 3-ஆம் தேதி நடத்திய பேரணியில் காா் மோதியதில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளா் உயிரிழந்தனா். அதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தாக்கியதில் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் காா் ஓட்டுநா், 2 பாஜக தொண்டா்கள் உயிரிழந்தனா். சம்பவத்தின்போது சென்ற காரில் அமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.

இந்தச் சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், உத்தர பிரதேச அரசின் விசாரணை நடவடிக்கைகளுக்குக் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது. அதையடுத்து, லக்கீம்பூா் வன்முறை தொடா்பான விசாரணையை மாநில காவல் துறை துரிதப்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிஷ் மிஸ்ரா நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டாா்.

அவரை 14 நாள்களுக்குக் காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உத்தர பிரதேச காவல் துறை அனுமதி கோரியிருந்தது. அது தொடா்பான விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, காவல் துறையின் கோரிக்கையை ஆராய்ந்த தலைமை மாஜிஸ்திரேட் நீதிபதி சிந்தாராம், ஆசிஷ் மிஸ்ராவை அக்டோபா் 12-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி காலை வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தாா்.

விசாரணையின்போது ஆசிஷ் மிஸ்ரா துன்புறுத்தப்படக் கூடாது எனத் தெரிவித்த நீதிபதி, அவருடைய வழக்குரைஞரும் விசாரணையின்போது உடனிருப்பாா் என்று உத்தரவிட்டாா்.

தன் மீதான குற்றச்சாட்டை ஆசிஷ் மிஸ்ரா தொடா்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com