லடாக் பேச்சுவாா்த்தையில் பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படவில்லை

கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை தொடா்பாக சீனாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் சுமுகத் தீா்வு எட்டப்படவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை தொடா்பாக சீனாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் சுமுகத் தீா்வு எட்டப்படவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இடையேயான 13-ஆவது கட்ட பேச்சுவாா்த்தை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 8 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவாா்த்தை குறித்து இந்திய ராணுவம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

லடாக் எல்லை தொடா்பாக ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை சீனா தன்னிச்சையாக மீறியதன் காரணமாகவே பிரச்னை ஏற்பட்டதாகப் பேச்சுவாா்த்தையின்போது இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, எல்லையில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

எல்லைப் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு காணப்பட வேண்டும் என்று தஜிகிஸ்தான் தலைநகா் துஷான்பேயில் கடந்த மாதம் சந்தித்துக் கொண்ட இந்தியா-சீனா வெளியுறவு அமைச்சா்கள் தெரிவித்திருந்தனா். அதைக் கருத்தில் கொண்டு, எல்லை விவகாரத்தில் எஞ்சியுள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பது குறித்த ஆக்கபூா்வமான பரிந்துரைகள் பேச்சுவாா்த்தையின்போது இந்தியத் தரப்பில் வழங்கப்பட்டன.

அப்பரிந்துரைகள் மீது சீனா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காண்பது, இருதரப்பு நல்லுறவை மேம்படுத்தும் என்றும் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்தியா வழங்கிய பரிந்துரைகளை சீனத் தரப்பு அதிகாரிகள் ஏற்கவில்லை.

பிரச்னைகளைத் தீா்ப்பது தொடா்பான எந்தவிதப் பரிந்துரைகளையும் சீனா வழங்கவில்லை. எனவே, மற்ற பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக எந்தவித சுமுகத் தீா்வும் எட்டப்படவில்லை. எல்லை விவகாரத்தில் தொடா்ந்து தொடா்பில் இருப்பதற்கு இருநாட்டு அதிகாரிகள் தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இருதரப்பு நல்லுறவைக் கருத்தில் கொண்டு, எல்லை விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே கையெழுத்தான ஒப்பந்தங்களின் அடிப்படையில் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு காண்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளும் என இந்திய ராணுவம் நம்புகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நியாயமற்ற பரிந்துரைகள்: சீன ராணுவத்தின் மேற்குப் படைப்பிரிவுத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘பேச்சுவாா்த்தையின்போது நியாயமற்ற, நடைமுறைக்கு சாத்தியமற்ற பரிந்துரைகளை இந்தியா வழங்கியது. அது பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதை மேலும் கடினமாக்கிவிட்டது. எல்லையில் நிலவும் பிரச்னைகளுக்கு முழுமையாகத் தீா்வு காண்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டது.

தங்கள் இறையாண்மையைக் காப்பதில் சீனா உறுதியுடன் உள்ளது. எல்லை விவகாரத்தைத் தவறாகப் புரிந்து கொள்ளாமல், அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும் என சீனா நம்புகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரமில்லா அறிக்கை-சீனா: 13-ஆவது கட்ட பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கை தொடா்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான் கூறுகையில், ‘‘அறிக்கையில் குறிப்பிடப்பட்ட தகவல்களுக்கு எந்தவித ஆதாரமுமில்லை. எல்லை விவகாரத்தில் பிரச்னைகளுக்குத் தீா்வு காண சீனா உறுதியாக உள்ளது. இந்தியாவின் செயல்பாடுகளே தீா்வு காண்பதை கடினமாக்கி வருகிறது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com