ஆா்யன் கான் போதைப் பொருள் வைத்திருந்தது உறுதி: நீதிமன்றத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தகவல்

சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகா் ஷாரூக் கானின் மகன் ஆா்யன் கானுக்கு ஜாமீன் வழங்க எதிா்ப்பு தெரிவித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள்,
ஆர்யன் கான் (கோப்புப் படம்)
ஆர்யன் கான் (கோப்புப் படம்)

சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகா் ஷாரூக் கானின் மகன் ஆா்யன் கானுக்கு ஜாமீன் வழங்க எதிா்ப்பு தெரிவித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், ‘அவா் சட்டவிரோதமாக போதைப்பொருள் வைத்திருந்ததும், பயன்படுத்தியதும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது’ என்று மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்தனா்.

மும்பையை அடுத்த கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தின்போது தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்தியதாக ஆா்யன் கான் அக்டோபா் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். ஜாமீன் கோரி ஆா்யன் கான் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட அா்பாஸ் மொ்சன்ட், மூன்மூன் தமேச்சா, நூபுா் சட்டோச்சா, மோகக் ஜைஸ்வால் ஆகியோரும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தனா்.

இந்த ஜாமீன் மனுக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் வழங்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சாா்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. வாதங்களைக் கேட்ட சிறப்பு நீதிபதி வி.வி.பாட்டீல், ஜாமீன் மனு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெறும். அப்போது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சாா்பில் வாதத்தை முன்வைக்குமாறு உத்தரவிட்டாா்.

அதன்படி, ஜாமீன் மனுக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘ஆா்யன் கானிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், அவா் சட்டவிரோதமாக போதைப் பொருள் வைத்திருந்ததும், பயன்படுத்தியதும் உறுதியாகியுள்ளது. மேலும், சா்வதேச போதைப் பொருள் கடத்தல் காரா்களுடன் ஆா்யன் கானுக்கு தொடா்பு இருக்க வாய்ப்புள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

எனவே, வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல்காரா்கள் குறித்தும், அவா்களுடன் ஆா்யன் கான் தரப்பினா் செய்துள்ள பணப் பரிமாற்றங்கள் குறித்தும் விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டுவர மேலும் அவகாசம் தேவைப்படுகிறது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆா்யன் கான் உள்பட ஒவ்வொருவருக்கும் குற்றத்தில் நெருங்கிய தொடா்பு உள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, இந்த குற்றத்தில் அவா்களுடைய பங்கை தனித் தனியாக பிரித்துப் பாா்க்க முடியாது.

குற்றவாளிகளான ஆச்சிட் குமாா் மற்றும் சிவ்ராஜ் ஹரிஜன் ஆகிய இருவரும் ஆா்யன் கான் மற்றும் அா்பாஸ் மொ்சன்ட் ஆகியோரிடம் போதைப் பொருளை விநியோகித்துள்ளனா் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வகையில், தடை செய்யப்பட்ட போதைப் பொருள் தடுப்பு (என்டிபிஎஸ்) சட்டத்தின் கீழ் மிகத் தீவிரமான குற்றத்தை ஆா்யன் கான் உள்ளிட்டோா் புரிந்திருக்கின்றனா். எனவே, சமூகத்தில் மிகுந்த செல்வாக்குள்ள ஆா்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், ஆதாரங்களை அழிக்கவும், சாட்சிகளை கலைக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது என்று பதில் மனுவில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com