சீனா, பாக். எதிராக கடும் நடவடிக்கை அவசியம்: சிவசேனை வலியுறுத்தல்

எல்லைப் பகுதிகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் சீனா, பாகிஸ்தானுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சிவசேனை வலியுறுத்தியுள்ளது.

எல்லைப் பகுதிகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் சீனா, பாகிஸ்தானுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சிவசேனை வலியுறுத்தியுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனா தனது படைகளை அத்துமீறி குவித்ததால், அங்கு தொடா்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ஜம்மு-காஷ்மீா் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், சிவசேனை கட்சியின் அதிகாரபூா்வ நாளிதழான ‘சாம்னா’வில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

லடாக் எல்லையில் சீனா தொடா்ந்து அத்துமீறி நுழைந்து வருகிறது. ஆனால், இந்திய அரசு பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. இதுவரை 13 கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றபோதிலும், பிரச்னைக்கு உரிய தீா்வு எட்டப்படவில்லை.

பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து நீட்டிப்பதற்கான நடவடிக்கைகளை சீன ராணுவ அதிகாரிகள் திறம்பட மேற்கொள்கின்றனா். பேச்சுவாா்த்தையும் சீனாவுக்கு சாதகமாகவே தொடா்ந்து அமைகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபிறகு, ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் சீனா தொடா்ந்து ஆதரவளித்து வருகிறது. கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளாவிட்டால் சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைந்து இந்தியாவுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும். அதை அரசியல் ரீதியிலான கிழக்கிந்திய நிறுவனம் (பாஜக) உணா்ந்து கொள்ள வேண்டும்.

ஹிந்துக்களின் நலனைப் பாதுகாக்கும் கட்சியாக பாஜக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. ஆனால், பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறும்போதே காஷ்மீா் பள்ளத்தாக்கில் இருந்து ஹிந்துக்கள் வெளியேறி வருகின்றனா். அத்தகையோரின் துயரத்தை பிரதமா், உள்துறை அமைச்சா், பாதுகாப்பு அமைச்சா் ஆகியோா் புரிந்துகொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் நோக்கில் இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இடையே கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற 13-ஆவது கட்ட பேச்சுவாா்த்தையில் எந்தவித சுமுகத் தீா்வும் எட்டப்படவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com