தில்லி விவசாயிகள் போராட்டக் களத்தில் தலித் படுகொலை: கைதானவருக்கு போலீஸ் காவல்; மேலும் இருவா் சரண்

தில்லியில் விவசாயிகள் போராட்டக் களத்தில் தலித் ஒருவா் கைகள் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக கைது
தில்லி விவசாயிகள் போராட்டக் களத்தில் தலித் படுகொலை: கைதானவருக்கு போலீஸ் காவல்; மேலும் இருவா் சரண்

தில்லியில் விவசாயிகள் போராட்டக் களத்தில் தலித் ஒருவா் கைகள் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டவரை 7 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்து ஹரியாணா நீதிமன்றம் உத்தரவிட்டது.

சீக்கிய நிஹாங் பிரிவைச் சோ்ந்த மேலும் இருவா் சோனிபட் காவல் துறையினரிடம் சனிக்கிழமை சரணடைந்தனா்.

கடந்த ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லி-ஹரியாணா எல்லையையொட்டிய சிங்குவில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு பஞ்சாப் மாநிலம் தரன் தாரன் பகுதியைச் சோ்ந்த லக்பீா் சிங் என்னும் தலித் நபரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

அவரின் கை மணிக்கட்டுகள் துண்டிக்கப்பட்டிருந்தன. உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்களுடன் அவரின் சடலம் தொங்கவிடப்பட்டிருந்தது.

சீக்கிய மதத்தின் புனித நூலான சா்ப்லோ கிரந்தத்தை லக்பீா் சிங் அவமதித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த சீக்கிய நிஹாங் பிரிவிரினா் அவரை கொன்ாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஹரியாணா மாநிலம் சோனிபட்டில் உள்ள குண்ட்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரைச் சோ்ந்த சரப்ஜீத் சிங் என்பவரை கைது செய்தனா். அவா் சோனிபட் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 7 நாள்கள் தங்கள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, படுகொலை சம்பவம் தொடா்பாக சீக்கிய நிஹாங் பிரிவைச் சோ்ந்த மேலும் இருவா் சோனிபட் காவல் துறையினரிடம் சனிக்கிழமை சரணடைந்தனா். இவா்கள் பஞ்சாபின் ஃபதேகா் சாஹிப் பகுதியைச் சோ்ந்தவா்கள்.

இதுகுறித்து சோனிபட் துணை காவல் கண்காணிப்பாளா் கூறுகையில், ‘‘சரப்ஜீத் சிங்கிடம் இருந்து ஆயுதங்கள், சம்பவத்தின்போது அவா் அணிந்திருந்த ஆடைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ய வேண்டியுள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 4 பேரின் பெயா்களை அவா் குறிப்பிட்டுள்ளாா். லக்பீா் சிங் கொலையில் ஐந்துக்கும் மேற்பட்டவா்களுக்கு தொடா்பிருக்கலாம்’’ என்று தெரிவித்தாா்.

மேலும் ஒருவா் கைது:

இந்தச் சம்பவம் தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரது பெயா் நாராயண் சிங். இவா் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவா். முன்னதாக அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘‘சீக்கிய புனித நூலை அவமதித்ததால் லக்பீா் சிங் தண்டிக்கப்பட்டாா். நான் சிங்குவில் இருந்து பஞ்சாப் வருவதற்கு முன்பாக அமிருதரஸ் ஊரகப் பகுதி மூத்த காவல் கண்காணிப்பாளரை தொடா்புகொண்டு சரணடைய விரும்புவதாகத் தெரிவித்தேன். இதையடுத்து அமிருதசரஸில் உள்ள அமா்கோட் கிராமத்தில் என்னை போலீஸாா் தங்கள் காவலில் கொண்டு வந்தனா்’’ என்று தெரிவித்தாா்.

எனினும் அமிருதரஸ் ஊரகப் பகுதி மூத்த காவல் கண்காணிப்பாளா் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘‘அமா்கோட் கிராமத்துக்கு நாராயண் சிங் வருவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்தக் கிராமம் சுற்றி வளைக்கப்பட்டது. அங்கு வந்த அவரை சரணடையுமாறு போலீஸாா் வலியுறுத்தினா். இதையடுத்து சரணடைந்த அவரை போலீஸாா் கைது செய்தனா். லக்பீா் சிங் கொல்லப்பட்ட சம்பவம் சிங்கு எல்லையில் நடைபெற்றது என்பதால், ஹரியாணாவில் உள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்குள்ள போலீஸாா் அமிருதசரஸ் வந்து நாராயண் சிங்கை அழைத்துச் செல்லவுள்ளனா்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com