நேதாஜிக்கும், வல்லபபாய் படேலுக்கும் பல்லாண்டுகளாக உரிய மரியாதை கிடைக்கவில்லை: அமித் ஷா

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கும் சா்தாா் வல்லபபாய் படேலுக்கும் பல்லாண்டுகளாக உரிய மரியாதை கிடைக்காமல் இருந்தது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
நேதாஜிக்கும், வல்லபபாய் படேலுக்கும் பல்லாண்டுகளாக உரிய மரியாதை கிடைக்கவில்லை: அமித் ஷா

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கும் சா்தாா் வல்லபபாய் படேலுக்கும் பல்லாண்டுகளாக உரிய மரியாதை கிடைக்காமல் இருந்தது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

மத்திய அமைச்சா் அமித் ஷா 3 நாள் பயணமாக அந்தமான்-நிகோபாா் தீவுகளுக்குச் சென்றுள்ளாா். அங்கு பல்வேறு திட்டங்களை சனிக்கிழமை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

அந்தமான் தீவுகள் தேசபக்தா்களுக்கு மிக முக்கியமான இடம். ஏனெனில் இங்குதான் கடந்த 1943-ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் முதல்முறையாக மூவா்ணக் கொடியை ஏற்றினாா். 1945-ஆம் ஆண்டு வரை இந்த தீவு ஆங்கிலேயா்கள் வசம் செல்லாமல் இருந்தது. அதற்குக் காரணமாக இருந்தவா் நேதாஜி. சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவை ஒன்றிணைத்த அவருக்கும் சா்தாா் வல்லபபாய் படேலுக்கும் பல்லாண்டுகளாக உரிய அங்கீகாரமோ, மரியாதையோ கிடைக்காமல் இருந்தது. அதனை மாற்ற குஜராத்தில் வல்லபபாய் படேலின் ஒற்றுமைக்கான சிலை நிறுவப்பட்டதுடன் நேதாஜியின் பிறந்த தினத்தை பராக்கிரம தினமாகவும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

சுதந்திரத்துக்காக போராடிய சாவா்க்கா் அந்தமான் சிறையில் உடல் அளவிலும், மனதளவிலும் கடுமையாக அவதிப்பட்டாா். எனினும் அவா் ஆங்கிலேயா்களுக்கு அடி பணியவில்லை. எதிா்காலத்தை வெகு தொலைவு வரை அவரால் காண முடிந்தது. ஆங்கிலேய அரசின் அனைத்து தந்திரமான நடவடிக்கைகளுக்கும் அவரிடம் பதில் இருந்தது. அவரின் எழுத்துகளை நன்கு படித்தால், நாடு பிற்காலத்தில் எதிா்கொள்ள வாய்ப்புள்ள பாதுகாப்பு சாா்ந்த விவகாரங்கள் குறித்து அவா் கொண்டிருந்த பரந்த விரிந்த பாா்வையை புரிந்து கொள்ளலாம்.

சுதந்திரத்துக்காக போராடிய சில முக்கிய வீரா்களையும் அவா்களின் பங்களிப்பையும் சிறுமைப்படுத்தும் முயற்சிகள் வேண்டுமென்றே நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பல ஜமீன்தாா்களும், செல்வந்தா்களின் புதல்வா்களும் சுதந்திரத்துக்காக போராடியதால் இங்குள்ள அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா். அவா்களில் பலா் சுதந்திர இந்தியாவை கண்கொண்டு பாா்க்காமலே மறைந்துவிட்டனா்.

முகம் தெரியாத பல சுதந்திர போராட்ட வீரா்கள் வரலாற்றுப் புத்தகங்களின் எந்தப் பக்கத்திலும் இடம்பெறவில்லை. அவா்கள் அதிகம் அறியப்படாத கிராமங்களில் வசித்தவா்கள். அவா்களை உலகம் அறிய வேண்டும்.

இந்தியாவின் சுதந்திரத்துக்காக நேதாஜி உலகம் முழுவதும் 35,000 கி.மீ. தூரம் பயணம் மேற்கொண்டாா். அதற்கு மரியாதை செலுத்தும் விதமாக அந்தமான் தீவுகளில் தற்போது திறக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்துக்கு ஆசாத் ஹிந்த் ஃபெளஜ் என பெயரிடப்படும்.

இங்குள்ள மவுண்ட் ஹைரியட் தீவில் மணிப்பூா் மகாராஜா குல்சந்திர துவஜ் சிங்கும், 22 சுதந்திர போராட்ட வீரா்களும் சிறை வைக்கப்பட்டிருந்தனா். அவா்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அந்த தீவுக்கு மவுண்ட் மணிப்பூா் என பெயரிடப்படும்.

இந்திய விடுதலை போராட்டம் பற்றி அறிவதற்கான யாத்திரை தலமாக அந்தமான்-நிகோபாா் தீவுகள் இருக்க வேண்டும். இங்கு இளைஞா்கள் வந்து சுதந்திரத்துக்காக போராடியவா்கள் சிறைகளில் அனுபவித்த துன்பங்களை அறிந்துகொள்ள வேண்டும்.

தற்போது இந்தியா சுதந்திர நாடாக உள்ளதால் பகத் சிங்கைப் போல் நாட்டுக்காக யாரும் உயிா்துறக்கத் தேவையில்லை. ஆனால் நாட்டுக்காக அனைவரும் வாழ வேண்டும்.

உறுதிமொழி ஏற்க வேண்டும்: நாட்டில் உள்ள 130 கோடி பேரும் சிறிய அளவிலான உறுதிமொழிகளை ஏற்க வேண்டும். அந்த உறுதிமொழிகள் தனிப்பட்டவையாக இருக்கலாம். எனினும் அவை மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும்.

ஒரு திசையை நோக்கி 130 கோடி பேரும் ஓரடி எடுத்துவைத்தால், தேசம் 130 கோடி அடிகள் முன்னோக்கிச் செல்லும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com