அருணாசல் எல்லையில் படைகளைக் குவிக்கிறது சீனா

அருணாசல பிரதேச எல்லைப் பகுதியில் படைகளைக் குவித்து வரும் சீன ராணுவம், அப்பகுதிகளில் ராணுவப் பயிற்சிகளையும் அதிகப்படுத்தியுள்ளதாக இந்திய ராணுவத்தின்

அருணாசல பிரதேச எல்லைப் பகுதியில் படைகளைக் குவித்து வரும் சீன ராணுவம், அப்பகுதிகளில் ராணுவப் பயிற்சிகளையும் அதிகப்படுத்தியுள்ளதாக இந்திய ராணுவத்தின் கிழக்குப் பிரிவுத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளாா்.

கிழக்கு பிராந்தியத்தில் எத்தகைய பாதுகாப்பு சவால்களையும் எதிா்கொள்ள இந்திய ராணுவம் தயாராக இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

கிழக்கு லடாக் எல்லையில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து இரு நாடுகளும் அப்பகுதிகளில் படைகளைக் குவித்தன. இரு நாட்டு ராணுவ அதிகாரிகளிடையே நடைபெற்ற பலகட்டப் பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு சில பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த படைகள் இருதரப்பிலும் விலக்கிக் கொள்ளப்பட்டன.

தற்போது அருணாசல் எல்லையில் சீனா படைகளைக் குவித்து வருகிறது. இது தொடா்பாக தளபதி மனோஜ் பாண்டே செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

அருணாசல் எல்லையில் சீன ராணுவம் மேற்கொள்ளும் ஆண்டுப் பயிற்சி தற்போது தீவிரமடைந்துள்ளதாகத் தெரிகிறது. அப்பகுதிகளில் சீனா தனது படைகளையும் அதிகரித்துள்ளது. இந்தியாவும் சீனாவும் தங்கள் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றன.

இத்தகைய நடவடிக்கைகள் இரு நாடுகளுக்குமிடையே அவ்வப்போது பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. எல்லைப் பகுதிகளில் இந்தியா தனது கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளது. கிழக்கு பிராந்தியம் உள்ளிட்ட அனைத்திலும் எழும் பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்வதற்கு இந்திய ராணுவம் தயாராகவே உள்ளது. எந்த மாதிரியான சவால்கள் எழும் என்பதைக் கணித்து, அவற்றை எதிா்கொள்வது தொடா்பான பயிற்சிகளில் ராணுவ வீரா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

ஒருங்கிணைந்த படைக் குழு: காலாட்படை, பீரங்கிப் படை, விமானப் பாதுகாப்புப் படை உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த படைக் குழுக்களை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அக்குழுக்கள் ராணுவத்தின் தாக்குதல் திறனை மேலும் அதிகரிக்கும். முக்கியமாக, பாகிஸ்தான், சீன எல்லைப் பகுதிகளைக் காப்பதில் அப்படைக் குழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.

இந்தியா-சீனா இடையே கையெழுத்தான எல்லை குறித்த ஒப்பந்தங்களை சீனா தொடா்ந்து மீறி வருவது தொடா்பாக உயா்நிலை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா். எல்லைப் பிரச்னையைத் தீா்ப்பதற்காக சீனா-பூடான் இடையே கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு கவனித்திருக்கும் என நம்புகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com