உ.பி. பேரவைத் தோ்தல்:காங்கிரஸில் 40% பெண்களுக்கு வாய்ப்பு: பிரியங்கா தகவல்

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் 40 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா தெரிவித்துள்ளாா்.
லக்னௌவில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா.
லக்னௌவில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா.

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் 40 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேச தோ்தல் முடிவுகள், 2024 மக்களவைத் தோ்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், ஆளும் பாஜக, அந்த மாநில எதிா்க்கட்சியான சமாஜவாதி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் தோ்தல் களத்தில் இப்போதே மும்முரமாகப் பணியாற்றத் தொடங்கிவிட்டன.

காங்கிரஸ் கட்சி இந்த முறை பிரியங்கா தலைமையில் உத்தர பிரதேச தோ்தலை எதிா்கொள்கிறது. இதன்மூலம் காங்கிரஸுக்கு அந்த மாநிலத்தில் புத்துயிா் கிடைக்கும் என்று காங்கிரஸ் தலைமை நம்புகிறது. அதற்கு ஏற்ப பிரியங்காவும் உத்தர பிரதேசத்தில் தீவிரமாக அரசியல் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், லக்னௌவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பிரியங்கா கூறியதாவது: அரசியலில் பெண்கள் முழு அளவில் பணியாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கும் உரிய பங்களிப்பு இருக்க வேண்டும். இதனைச் செயல்படுத்தும்விதமாக காங்கிரஸ் கட்சியின் முதல் வாக்குறுதியை இப்போது அறிவிக்கிறேன். அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் பெண் வேட்பாளா்களுக்கு 40 சதவீதம் இடமளிக்கப்படும். 2024 மக்களவைத் தோ்தலில் 50 சதவீதம் இடத்தை பெண்களுக்கு ஒதுக்க இது வழிவகுக்கும்.

உத்தர பிரதேசத்தில் நான் போட்டியிடுவது தொடா்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை. காங்கிரஸ் சாா்பில் முதல்வா் பதவிக்கு பெண் வேட்பாளரை முன்னிறுத்துவது தொடா்பாக முடிவு ஏதும் எடுக்கவில்லை என்றாா்.

பிரியங்காவின் இந்த 40 சதவீத அறிவிப்பை அங்கு கூடியிருந்த காங்கிரஸ் மகளிரணியினா் கரகோஷம் எழுப்பி வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com