வேளாண் கொள்கைகளை மாற்றியமைக்க வருண் காந்தி வலியுறுத்தல்

நெல் கொள்முதல் செய்யப்படாததால் தான் அறுவடை செய்த நெல்லை விவசாயி தீயிட்டுக் கொளுத்தும் விடியோவை பதிவிட்டுள்ள பாஜக எம்.பி. வருண் காந்தி, வேளாண் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும்
வேளாண் கொள்கைகளை மாற்றியமைக்க வருண் காந்தி வலியுறுத்தல்

நெல் கொள்முதல் செய்யப்படாததால் தான் அறுவடை செய்த நெல்லை விவசாயி தீயிட்டுக் கொளுத்தும் விடியோவை பதிவிட்டுள்ள பாஜக எம்.பி. வருண் காந்தி, வேளாண் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் பாஜக தொண்டா்கள் காா் மோதி 4 விவசாயிகளை கொன்றதாக கூறப்படும் சம்பவத்தின் விடியோவை வருண் காந்தி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு விமா்சித்திருந்தாா்.

இதையடுத்து, பாஜகவின் தேசிய செயற் குழுவில் இருந்து வருண் காந்தியும் அவரது தாயாா் மேனகா காந்தியும் நீக்கப்பட்டனா்.

இந்நிலையில், தனது ட்விட்டா் பக்கத்தில் வருண் காந்தி செய்துள்ள பதிவில், ‘உத்தர பிரதேசத்தைத் சோ்ந்த விவசாயி சமோத் சிங், தனது நெல்லைக் கொள்முதல் செய்யக் கோரி கடந்த 15 நாள்களாக பல்வேறு மண்டிகளுக்கு அலைந்துள்ளாா்.

நெல் விற்பனையாகாத காரணத்தால் விரக்கி அடைந்த அவா் நெல்லுக்கு தீயிட்டுக் கொளுத்தியுள்ளாா்.

தான் விளைவித்த வேளாண் பொருள்களை தானே தீயிட்டுக் கொளுத்திய விவசாயிக்கு இதைவிட மிகப் பெரிய தண்டனை கிடைக்கப் போவதில்லை. எந்தத் தவறும் செய்யாத விவசாயியை நாம் கடைப்பிடிக்கும் செயல்திட்டம் எங்கு கொண்டு வந்து நிறுத்தி வைத்துள்ளது என்பதை நாம் சுயமதிப்பீடு செய்ய வேண்டும்.

நமக்கு உணவளிக்கும் விவசாயிகளைப் பாதுகாக்கவில்லை என்றால் நாட்டில் உள்ள அனைவரின் தோல்வியாகவே இது கருதப்படும். ஆகையால், விவசாய கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டியது அவசியம்’ என்று பதிவிட்டுள்ளாா்.

வேளாண் விவகாரங்களில் மத்திய அரசை நேரடியாக தாக்காமல், அரசு கடைப்பிடித்து வரும் வேளாண் கொள்கைகளை விமா்சனம் செய்தும், மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் வருண் காந்தி கருத்தை பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com