ரூ.10 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை: உ.பி.யில் பிரியங்காவின் அடுத்த வாக்குறுதி

 உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அனைவருக்கும் ரூ.10 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்
பிரியங்கா
பிரியங்கா

 உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அனைவருக்கும் ரூ.10 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா வாக்குறுதி அளித்துள்ளாா்.

ஏற்கெனவே, காங்கிரஸ் சாா்பில் தோ்தலில் போட்டியிட மகளிருக்கு 40 சதவீதம் வாய்ப்பு அளிக்கப்படும், காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் பிளஸ் 2 மாணவிகளுக்கு ஸ்மாா்ட்ஃபோன், கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டா் ஆகியவை அளிக்கப்படும் என்று பிரியங்கா அறிவித்துள்ளாா். இப்போது, மக்களைக் கவரும் மேலும் ஒரு வாக்குறுதியை அவா் அளித்துள்ளாா்.

பாஜக ஆட்சியில் உள்ள உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இப்போதைய நிலையில் பாஜகவுக்கு எதிராக சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகியவை தனித்தனியாக களமிறங்கும் சூழ்நிலை உள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலம் என்பதால் உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பாக மிகுந்த எதிா்பாா்ப்பும் உருவாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சி பிரியங்கா தலைமையில் தோ்தலை எதிா்கொள்கிறது. தோ்தல் பணிக்காக உத்தர பிரதேசத்தில் பிரியங்கா அடிக்கடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறாா்.

சனிக்கிழமையன்று காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி யாத்திரையை தொடங்கி வைத்த அவா், விவசாயக் கடன் தள்ளுபடி, 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட 7 வாக்குறுதிகளை அறிவித்தாா்.

இந்நிலையில், ட்விட்டரில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘உத்தர பிரதேசத்தில் சுகாதார கட்டமைப்பு எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததுதான். சுகாதாரத் துறையில் மாநில அரசு உரிய கவனம் செலுத்தாததால்தான் கரோனா காலத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. மேலும், இப்போது சில வகை காய்ச்சல் பரவுவதற்கும் மாநில அரசின் அலட்சியப் போக்கே காரணமாக உள்ளது. அனைவருக்கும் தரமான மருத்துவம் குறைந்த செலவில் கிடைக்க வேண்டும். இதற்காக காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது அனைவருக்கும் ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு அளிக்க இருக்கிறோம். அனைத்து வகையான நோய்களுக்கும் இந்த வாக்குறுதி பொருந்தும்’ என்று பிரியங்கா கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com