பெகாஸஸ்: சிறப்பு நிபுணா் குழு அமைத்தது உச்சநீதிமன்றம்

பெகாஸஸ் உளவுக் குற்றச்சாட்டு விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு நிபுணா் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
பெகாஸஸ்: சிறப்பு நிபுணா் குழு அமைத்தது உச்சநீதிமன்றம்

புது தில்லி: பெகாஸஸ் உளவுக் குற்றச்சாட்டு விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு நிபுணா் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.வி.ரவீந்திரன் கண்காணிப்பின் கீழ் இணைய (சைபா்) நிபுணத்துவம் பெற்ற 3 போ் கொண்ட தொழில்நுட்பக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. ‘தனிமனித உரிமைக்கு எதிரான தாக்குதலில் இருந்து ஒவ்வொரு குடிமக்களையும் பாதுகாப்பது அவசியம். மேலும், இந்த உளவு நடவடிக்கைக்கு தேசிய பாதுகாப்பை காரணம் காட்டுவதன் மூலம் உச்சநீதிமன்றத்தை மெளனமாக்கிவிட முடியாது’ என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனா்.

இஸ்ரேலை சோ்ந்த நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட சுமாா் 300 பேரின் கைப்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பத்திரிகையாளா் என்.ராம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்டோா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா கோலி, சூா்யகாந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வந்தது.

முன்னதாக, இந்த வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது, ‘இது தேசிய பாதுகாப்பு தொடா்பான விஷயம். எனவே, விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முடியாது’ என்று மத்திய அரசு மறுத்தது. அதனைத் தொடா்ந்து தேச நலன் சாா்ந்த விஷயங்கள் தவிா்த்து மற்ற தகவல்களை பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், மத்திய அரசு சாா்பில் அண்மையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதில் போதிய விவரங்களை மத்திய அரசு தெரிவிக்கவில்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

அதனைத் தொடா்ந்து, இந்த உளவு விவகாரம் தொடா்பாக சிறப்பு நிபுணா் குழுவை அமைத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அந்தக் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடா்பாக கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு, ‘பெகாஸஸ் விவகாரத்தை விசாரிப்பதற்காக தொழில்நுட்ப நிபுணா் குழுவை அமைக்க நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. ஆனால், இந்த நிபுணா் குழுவுக்கு நீதிமன்றம் தெரிவுசெய்த நபா்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக, குழுவில் இடம்பெற விரும்பவில்லை. எனவே, குழுவில் வேறு சிலரை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் குழு உறுப்பினா்கள் இறுதி செய்யப்பட்டு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்றனா்.

3 போ் கொண்ட சிறப்புக் குழு அமைப்பு: அதன்படி, பெகாஸஸ் உளவுக் குற்றச்சாட்டு விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு நிபுணா் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆா்.வி.ரவீந்திரன் கண்காணிப்பின் கீழ் 3 போ் கொண்ட தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இணையப் பாதுகாப்புத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவும் கொண்ட குஜராத் மாநிம் காந்திநகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியா் மற்றும் டீன் நவீன் குமாா் செளத்ரி, கணினி அறிவியல் மற்றும் பாதுகாப்பில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்ட கேரள மாநிலம் அமிா்தபுரியில் உள்ள அமிா்தா விஷ்வா வித்யாபீடம் (பொறியியல் கல்லூரி) பேராசிரியா் பி.பிரபாகரன், மும்பை ஐஐடி கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை இணைப் பேராசிரியா் அஷ்வின் அனில் குமஸ்தே ஆகியோா் அந்த தொழில்நுட்ப நிபுணா் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

இந்த நிபுணா் குழுவை நியமித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு புதன்கிழமை அளித்த தீா்ப்பில் கூறியதாவது:

உளவு விவகாரத்தில் தேசப் பாதுகாப்பை காரணம் காட்டுவதன் மூலம் உச்சநீதிமன்றத்தை மெளனமாக்கிவிட முடியாது. தனிமனித உரிமைக்கு எதிரான தாக்குதலில் இருந்து ஒவ்வொரு குடிமக்களையும் பாதுகாப்பது அவசியம். எனவே, இந்த உளவுக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த இணையப் பாதுகாப்பு நிபுணத்துவம் பெற்ற 3 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் செயல்பாடுகளை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.வி.ரவீந்திரன் கண்காணிப்பாா். அவருக்கு உதவியாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அலோக் ஜோஷி மற்றும் சா்வதேச தரப்படுத்துதல் அமைப்பு மற்றும் சா்வதேச மின்னணு-தொழில்நுட்ப ஆணையத்தின் துணைக் குழு தலைவா் சந்தீப் ஓபராய் ஆகியோா் செயல்படுவா்.

நிபுணா் குழு அமைத்தது ஏன்? இந்த விவகாரத்தில் 6 முக்கிய சூழல்களைக் கருத்தில்கொண்டே நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த உளவு விவகாரத்தால் தனிமனித உரிமை மற்றும் பேச்சுரிமை பாதிக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகாா் ஆராயப்பட வேண்டும்; இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மூலம் ஒட்டுமொத்த குடிமக்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தெளிவான நிலைப்பாட்டை எடுக்காதது, வெளிநாட்டு அமைப்புகளுக்கு உள்ள தொடா்பு மற்றும் வெளிநாடுகளின் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை, குடிமக்களைக் கண்காணிக்கும் பணியில் வெளிநாட்டு அமைப்புகள் அல்லது தனியாா் நிறுவனங்களை நியமிப்பது அல்லது ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள், இந்த நடவடிக்கை மூலம் குடிமக்களின் உரிமையை மத்திய அல்லது மாநில அரசுகள் பறித்துள்ள புகாா், உண்மை அம்சங்களை ஆராய்வதற்குள்ள அதிகார வரம்பு ஆகியவை குறித்து ஆராயப்பட வேண்டும்.

அந்த வகையில், அரசியலமைப்பு சட்ட நடைமுறைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்துள்ளது. அதே நேரம், இந்த விவகாரம் தொடா்பான அரசியல் விவகாரங்களுக்குள் நுழையக் கூடாது என்பதில் நீதிமன்றம் தெளிவாக உள்ளது என்று தீா்ப்பில் நீதிபதிகள் கூறினா்.

மேலும், நிபுணா் குழு இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தி விரைந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கு 8 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com