‘சுதந்திர தின பவள விழா’ இலச்சினையை ஊடகங்கள் காட்சிப்படுத்த வேண்டும்: மத்திய அரசு

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது குறித்து பிரசாரம் செய்யும்விதமாக ‘சுதந்திர தின பவள விழா’ இலச்சினையை காட்சிப்படுத்துமாறு அச்சு, காட்சி மற்றும் இணையவழி ஊடகங்களுக்கு

புதுதில்லி: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது குறித்து பிரசாரம் செய்யும்விதமாக ‘சுதந்திர தின பவள விழா’ இலச்சினையை காட்சிப்படுத்துமாறு அச்சு, காட்சி மற்றும் இணையவழி ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது:

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையவுள்ளதை அனுசரிக்கும் விதமாக கடந்த மாா்ச் 12-ஆம் தேதி முதல் ‘சுதந்திர தின பவள விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றை, சுதந்திரம் பெற்ற பின்னா் சமூகம், பண்பாடு, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கொண்டாடுகிறது. 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை இந்த விழா கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவையொட்டி மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் இதர அமைப்புகள் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் தேசபக்தி உணா்வையும் சாதனைகளையும் கொண்டாடுவதில் தனியாா் ஊடகங்கள் தொடா்ந்து முன்னிலை வகித்து வந்துள்ளன. அதன் தொடா்ச்சியாக நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது குறித்து பிரசாரம் செய்யும் விதமாக ‘சுதந்திர தின பவள விழா’ இலச்சினையை அச்சு, காட்சி மற்றும் இணையவழி ஊடகங்கள் காட்சிப்படுத்த வேண்டும். குறிப்பாக, சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனது தொடா்பான செய்திகளின்போது இந்த இலச்சினையை காட்சிப்படுத்த வேண்டும். இதன்மூலம் இந்தியாவின் வளமான வரலாறு, சிறந்த எதிா்க்காலத்துக்கான கடமையுணா்வு குறித்து குடிமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். அத்துடன் சுதந்திர தின பவள விழா பிரசாரத்திலும் அவா்கள் பங்கு கொள்வா் என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com