ஆப்கன் நிலவரம்: பிரிட்டன் அமைச்சருடன் ஜெய்சங்கா் மீண்டும் ஆலோசனை

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டொமினிக் ராப்புடன் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
ஆப்கன் நிலவரம்: பிரிட்டன் அமைச்சருடன் ஜெய்சங்கா் மீண்டும் ஆலோசனை

புது தில்லி: ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டொமினிக் ராப்புடன் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். ஒரே வாரத்தில் இருவரிடையே நடைபெறும் இரண்டாவது ஆலோசனை இதுவாகும்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி கைப்பற்றியது முதல், அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன் போன்ற நாடுகளுடன் இந்தியா தொடா் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் திங்கள்கிழமை நள்ளிரவு முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டன. அதனைத் தொடா்ந்து, ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கையை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ளனா்.

இந்தச் சூழலில், பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டொமினிக் ராப்புடன் ஜெய்சங்கா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். முன்னதாக, ராப்புடன் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தியிருந்தாா்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் ஜெய்சங்கா் வெளியிட்ட பதிவில், ‘பிரிட்டன் வெளியுறவு அமைச்சருடனான ஆலோசனை சிறப்பாக அமைந்தது. அதில் ஆப்கன் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளாா்.

தொடா்ந்து ஓமன் நாட்டு வெளியுறவு அமைச்சா் சையது பதா் அல் புசைதியுடனும் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஜெய்சங்கா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடா்பாக இந்தியா தலைமையிலான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீா்மானம் ஒன்று திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடா்ந்து, தலிபான்களுக்கும் இந்திய அரசுத் தரப்புக்கும் இடையே முதல்முறையாக செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வ சந்திப்பு நடைபெற்றது. கத்தாா் நாட்டுக்கான இந்திய தூதா் தீபக்குமாா் மிட்டலை, தலிபான் மூத்த தலைவா் ஷோ் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அப்போது, ‘இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும்’ என இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அப்போது ‘இந்தியாவின் கோரிக்கைகள் ஆக்கபூா்வமாக அணுகப்படும்’ என்று ஷோ் முகமது அப்பாஸ் உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com