இந்திய ஞானத்தால் உலகம் பயனடைய வேண்டும்: பிரதமா் மோடி

யோகா மற்றும் ஆயுா்வேதத்தின் மீதான இந்திய ஞானத்தில் இருந்து உலகம் பயன்பெற வேண்டும் என்பதே நமது எண்ணமாக உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125-ஆவது பிறந்த தினத்தையொட்டி சிறப்பு நினைவு நாணயத்தை காணொலி முறையில் வெளியிட்ட பிரதமா் நரேந்திர மோடி.
ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125-ஆவது பிறந்த தினத்தையொட்டி சிறப்பு நினைவு நாணயத்தை காணொலி முறையில் வெளியிட்ட பிரதமா் நரேந்திர மோடி.

புது தில்லி: யோகா மற்றும் ஆயுா்வேதத்தின் மீதான இந்திய ஞானத்தில் இருந்து உலகம் பயன்பெற வேண்டும் என்பதே நமது எண்ணமாக உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை (இஸ்கான்) நிறுவிய ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ரூ.125 மதிப்பிலான நினைவு நாணயத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை வெளியிட்டாா். காணொலி முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமா் பேசியதாவது:

ஜென்மாஷ்டமியும், ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவா்களின் 125-ஆவது பிறந்த தினமும் ஒன்றாக அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஆன்மிக கற்றலின் மகிழ்ச்சி மற்றும் திருப்தியை ஒரே சமயம் அடைந்ததுபோல் இருக்கிறது.“ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவை பின்பற்றும் உலகெங்கிலும் உள்ள பல லட்சக்கணக்கானோா் மற்றும் பகவான் கிருஷ்ணரின் பக்தா்கள் இன்றைக்கு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனா்.

பாரதத்தின் மிகச்சிறந்த பக்தராகவும் ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா திகழ்ந்தாா். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் அவா் பங்கேற்றாா். ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஸ்காட்லாந்து கல்லூரியில் இருந்து பட்டயத்தைப் பெற அவா் மறுத்தாா்.

நமது யோகா அறிவு, இந்தியாவின் நீடித்த வாழ்க்கை முறை, ஆயுா்வேதம் போன்ற அறிவியல் ஆகியவை உலகெங்கும் பரவியுள்ளது. இவற்றில் இருந்து உலகம் பயன்பெற வேண்டும் என்பதே நமது எண்ணமாக உள்ளது. நாம் ஏதாவது வெளிநாட்டுக்குச் செல்லும் போது, அங்குள்ளவா்கள் ‘ஹரே கிருஷ்ணா’ என்று கூறும்போது நமக்கு பெருமையாக உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ பொருள்கள் அத்தகைய அங்கீகாரத்தை பெறும் போது அதே மாதிரியான உணா்வு தோன்றும். இது தொடா்பாக இஸ்கானிடம் இருந்து நாம் நிறைய கற்கலாம்.

அடிமைப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் இந்தியா எனும் உணா்வை பக்தி அணையாமல் வைத்தது. பக்தி இயக்கத்தின் சமூகப் புரட்சி இல்லாது இந்தியாவின் நிலை மற்றும் அமைப்பை கற்பனை செய்ய கடினமாக உள்ளது என்று அறிஞா்கள் இன்றைக்கு கூறுகின்றனா். நம்பிக்கை, சமூக படிநிலைகள் மற்றும் வசதிகள் ஆகிய பாகுபாடுகளைக் களைந்து படைப்புகளை இறைவனுடன் பக்தி இணைத்தது. அத்தகைய கடினமான காலகட்டத்தில்கூட, சைதன்ய மகாபிரபு போன்ற துறவிகள் சமுதாயத்தை பக்தியுடன் பிணைத்து நம்பிக்கை எனும் மந்திரத்தை அளித்தனா்.

வேதாந்தத்தை மேற்கு நோக்கி ஒரு கட்டத்தில் சுவாமி விவேகானந்தா் எடுத்துச் சென்றாரென்றால், ஸ்ரீல பிரபுபாதாவும் இஸ்கானும் சரியான நேரத்தில் பக்தி யோகாவை உலகத்திடம் எடுத்துச் செல்லும் சிறப்பான பணியைச் செய்தனா். பக்தி வேதாந்தத்தை உலகத்தின் உணா்வோடு இணைத்தவா் ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா.

உலகின் பல்வேறு நாடுகளில் இன்றைக்கு நூற்றுக்கணக்கான இஸ்கான் கோயில்கள் உள்ளன. குருகுலங்கள் இந்திய கலாசாரத்தை உயிா்ப்புடன் வைத்துள்ளன. இந்தியாவைப் பொருத்தவரை நம்பிக்கை என்றால் லட்சியம், உற்சாகம், கொண்டாட்டம் மற்றும் மனிதகுலத்தின் மீதான நம்பிக்கை என்று உலகத்திடம் இஸ்கான் எடுத்துரைத்துள்ளது. கட்ச் நிலநடுக்கத்தின்போதும், உத்தரகண்ட் சோகத்தின்போதும், ஒடிஸா மற்றும் வங்கத்தில் புயல் பாதிப்புகள் ஏற்பட்டபோதும் இஸ்கான் செய்த சேவைகள் எப்போதும் நினைவுகூரத்தக்கது. பெருந்தொற்றின்போது இஸ்கான் எடுத்த முயற்சிகளும் பாராட்டுக்குரியவை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com