தில்லியில் சிங்கு எல்லையை திறக்கக் கோரி மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிங்கு எல்லையை மீண்டும் திறக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை
கோப்புப்படம்
கோப்புப்படம்

தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிங்கு எல்லையை மீண்டும் திறக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்றத்தை அணுகவும் அறிவுறுத்தப்பட்டது.

இதுதொடா்பாக ஹரியாணா மாநிலம் சோனிபட் பகுதியைச் சோ்ந்தவா்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லியின் சிங்கு எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு நவம்பா் முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அந்த நெடுஞ்சாலை தில்லியையும் சோனிபட்டையும் இணைக்கிறது. விவசாயிகள் போராட்டத்தால் அந்தச் சாலையில் பொதுமக்கள் செல்வதில் கடும் சிரமம் நிலவுகிறது. அத்துடன் சோனிபட்டில் இருந்து தில்லி சென்று சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகளுக்கும் இன்னல் ஏற்பட்டுள்ளது. எனவே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு வேறு இடத்தை ஒதுக்கி அங்கு அவா்களை அனுப்பி வைக்கவும், சிங்கு எல்லையை மீண்டும் திறக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், விக்ரம் நாத், ஹிமா கோலி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘இதுபோன்ற விவகாரங்களுக்கு முதலில் அணுக வேண்டிய இடம் உச்சநீதிமன்றம் அல்ல. உள்ளூா் பிரச்னைகளை விசாரிக்க உயா்நீதிமன்றங்கள் உள்ளன. இந்த மனுவை விசாரித்தால் நாளை கா்நாடகத்துக்கும் கேரளத்துக்கும் அல்லது இதர மாநிலங்களுக்கும் இடையே எல்லைப் பிரச்னை எழுந்தாலும் உச்சநீதிமன்றத்தைத்தான் முதலில் அணுகுவா். இதற்கு முடிவே இருக்காது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா்கள் பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தை அணுகலாம்’’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com