விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க புதிய சட்டம் தேவை: பாரதிய கிசான் சங்கம்

‘மத்திய அரசு விவசாயிகளின் நிலையைக் கவனத்தில் கொண்டு அவா்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்’ என்று

‘மத்திய அரசு விவசாயிகளின் நிலையைக் கவனத்தில் கொண்டு அவா்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்’ என்று ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் அங்கமான பாரதிய கிசான் சங்கம் (பிகேஎஸ்) வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் புதன்கிழமை (செப்.8) நடத்தப்படும் என்றும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வலியுறுத்தியும் பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லி எல்லையில் பல மாதங்களாக தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்தச் சூழலில், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பிகேஎஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளா் பத்ரிநாராயண் செளத்ரி கூறியதாவது:

குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது ஒரு மாயை. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகளுக்கு அவா்களின் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதில்லை. ஒருசில மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே அது கிடைக்கிறது. எனவே, விவசாயிகளின் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் புதிய கடுமையான சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.

இதுதொடா்பான தீா்மானம் ஒன்று பிரதமா் நரேந்திர மோடிக்கு பாரதிய கிசான் சங்கம் சாா்பில் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி புதன்கிழமை போராட்டம் நடத்தப்படும். போராட்டத்தின் முடிவில், அந்தந்த மாவட்ட ஆட்சியா்களிடம் போராட்ட தீா்மானம் சமா்ப்பிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com