இந்திய, ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு

தில்லியில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் வெள்ளிக்கிழமை சந்தித்தார். இரு நாடுகள் இடையேயான 2+2 பேச்சுவார்த்தை தில்லியில் (செப். 11) நடைபெறவுள்ள நிலையில்
ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட்டர் டட்டனை வரவேற்ற இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட்டர் டட்டனை வரவேற்ற இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

புது தில்லி: தில்லியில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் வெள்ளிக்கிழமை சந்தித்தார். இரு நாடுகள் இடையேயான 2+2 பேச்சுவார்த்தை தில்லியில் சனிக்கிழமை (செப். 11) நடைபெறவுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்திய-ஆஸ்திரேலிய வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கும் முதலாவது 2+2 பேச்சுவார்த்தை தில்லியில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பெய்ன், பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் வெள்ளிக்கிழமை இந்தியா வந்தனர்.

அதைத் தொடர்ந்து, தில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர், அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ஆஸ்திரேலிய அமைச்சர் டட்டனுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டேன். பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. இந்தியா-ஆஸ்திரேலியாவின் விரிவான ராஜதந்திர கூட்டணியின் முழுமையான திறனை உணர இருவரும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளோம்.

இரு நாடுகளுக்கிடையிலான உறவானது சுதந்திரமான, வெளிப்படையான, சட்டத்தின் அடிப்படையிலான இந்தோ-பசிபிக் பிராந்தியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. க்வாட் நாடுகளின் கடற்படைகள் பங்கேற்ற "மலபார்' கூட்டுப் பயிற்சியில் ஆஸ்திரேலியா இணைந்ததில் இருவரும் மகிழ்ச்சி தெரிவித்தோம்.

பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தாராளமயமாக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகளைப் பயன்படுத்திக் கொள்ள ஆஸ்திரேலிய தொழில் துறைக்கு அழைப்பு விடுத்தேன். இணையான வளர்ச்சி, உற்பத்தியில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் இருப்பதை ஒப்புக் கொண்டோம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2+2 பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்த கருத்துப் பரிமாற்றங்களுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்படவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


"தலிபான்களின் எழுச்சியால் பாதுகாப்பு கவலைகள் அதிகரிப்பு'


தலிபான்களின் எழுச்சியானது இந்தியா மற்றும் பிராந்தியத்தில் கடுமையான பாதுகாப்பு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது என, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லியில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டனுடனான சந்திப்பின்போது அமைச்சர் ராஜ்நாத் சிங் இதைத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறியது: தலிபான்களின் எழுச்சியானது ஆப்கானிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் பயங்கரவாதக் குழுக்கள் தங்களது நடவடிக்கைகளை விரிவுபடுத்த கூடுதல் ஆதரவைப் பெற்றுத் தரக்கூடும் என ஆஸ்திரேலிய அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 

எந்த ஒரு நாட்டையும் அச்சுறுத்தவோ, தாக்கவோ ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படக் கூடாது என்கிற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை அமல்படுத்த சர்வதேச சமூகம் சாத்தியமான அனைத்தையும் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், தலிபான்களின் ஆட்சியில் மனித உரிமைகள் மீறல், பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினரின் உரிமைகள் நசுக்கப்படுதல் ஆகியவை குறித்தும் இந்தியாவின் கவலையை ராஜ்நாத் சிங் தெரிவித்தார் என அந்த வட்டாரங்கள் கூறின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com