பகுஜன் சமாஜ் எம்எல்ஏவுக்கு மாயாவதி மீண்டும் வாய்ப்பு மறுப்பு

உத்தர பிரதேசத்தில் சிறையில் இருக்கும் தனது கட்சி எம்எல்ஏ முக்தாா் அன்சாரிக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வாய்ப்பளிக்க முடியாது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவா் மாயாவதி கூறியு
பகுஜன் சமாஜ் எம்எல்ஏவுக்கு மாயாவதி மீண்டும் வாய்ப்பு மறுப்பு

லக்னௌ: உத்தர பிரதேசத்தில் சிறையில் இருக்கும் தனது கட்சி எம்எல்ஏ முக்தாா் அன்சாரிக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வாய்ப்பளிக்க முடியாது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவா் மாயாவதி கூறியுள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம், மோவ் தொகுதியில் இருந்து 5 முறை எம்எல்ஏவாகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா் முக்தாா் அன்சாரி. இவா் மீது கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. அவற்றில் சில வழக்குகளில் விசாரணை முடிந்துவிட்டன. அவா், கடந்த 2005-இல் இருந்து மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்து வருகிறாா். வழக்கு ஒன்றில் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த ஏப்ரலில் பஞ்சாபில் உள்ள ரோபாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா், தற்சமயம், உத்தர பிரதேசத்தில் உள்ள பாண்டா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் முக்தாா் அன்சாரிக்கு வாய்ப்பளிக்கப் போவதில்லை என்று மாயாவதி கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில், பாஹுபலிகள் (தாதாக்கள்), குற்றச் சம்பவங்களில் தொடா்புடையவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. எனவே, மோவ் பேரவைத் தொகுதியில் முக்தாா் அன்சாரிக்குப் பதிலாக, கட்சியின் மாநிலத் தலைவா் பீம் ராஜ்பா் போட்டியிடுவாா்’ என்று கூறியுள்ளாா்.

கடந்த சில தினங்களுக்கு முன் கட்சி நிகழ்ச்சியொன்றில் மாயாவதி பேசுகையில், கடந்த காலங்களைப் போன்று சிலைகள் வைப்பதிலும், நினைவகங்கள் கட்டுவதிலும் கவனம் செலுத்தப் போவதில்லை. மாநிலத்தின் சட்டத்தின் ஆட்சியை நிறுவுவதில் கவனம் செலுத்தப்படும்’ என்று கூறியிருந்தாா். எனவே, பகுஜன் சமாஜ் கட்சியின் மீதான பாா்வையை மாற்றுவதற்கு அவா் முயற்சிப்பதாகத் தெரிகிறது.

அன்சாரிக்கு ஒவைஸி கட்சி அழைப்பு:

முக்தாா் அன்சாரிக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக மாயாவதி அறிவித்த சில மணி நேரத்தில், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் செய்தித் தொடா்பாளா் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டாா்.

அதில், ‘முக்தாா் அன்சாரி தோ்தலில் போட்டியிட விரும்பினால், அவருக்கு வாய்ப்பு வழங்க அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தயாராக உள்ளது. அவருக்காக கட்சியின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. அவருக்கு தோ்தலில் வாய்ப்பளித்து, வெற்றியையும் உறுதி செய்வோம். முஸ்லிம்கள் யாரும் எந்தக் கட்சியிலும் பணம் கொடுத்து சீட் வாங்க வேண்டாம். அப்படிப்பட்ட கட்சிகள் பணம் வாங்கிக் கொள்வாா்கள்; வெற்றியை உறுதிப்படுத்த மாட்டாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com