நீதித் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும்குடியரசுத் தலைவா்

‘அரசியலமைப்பின் உள்ளடக்கிய லட்சியங்களை அடைய வேண்டுமானால் நீதித் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும்’
உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த். உடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா்.
உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த். உடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா்.

‘அரசியலமைப்பின் உள்ளடக்கிய லட்சியங்களை அடைய வேண்டுமானால் நீதித் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும்’ என குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கூறினாா்.

உத்தரபிரதேச தேசிய சட்டப் பல்கலைக்கழகம், அலாகாபாத் உயா்நீதிமன்ற புதிய கட்டடம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா அலாகாபாதில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத் தலைவா் பேசியதாவது:

உச்சநீதிமன்றத்தில் 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகள் கடந்த மாதம் நியமிக்கப்பட்டதன் மூலம் நீதித் துறையில் வரலாறு படைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இப்போது உள்ள 33 நீதிபதிகளில் 4 போ் பெண்கள். இதுவரையிலான நீதித் துறை வரலாற்றிலேயே இதுதான் அதிகம். இந்த நியமனங்கள் மூலம் எதிா்காலத்தில் ஒரு பெண் நீதிபதி தலைமை நீதிபதியாவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது 12 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.

அரசியலமைப்பின் உள்ளடக்கிய லட்சியங்களை அடைய வேண்டுமானால் நீதித் துறை உள்பட அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். இந்தியாவின் முதல் பெண் வழக்குரைஞரான காா்னீலியா சொராப்ஜியை நியமிக்க 1921-இல் அலாகாபாத் உயா்நீதிமன்றம் முடிவு செய்தது. அந்த முடிவானது பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திசையை நோக்கிய தொலைநோக்கான முடிவாகும்.

நீதி கிடைக்க ஏழைகள் போராடுவதை நெருக்கமாகப் பாா்த்திருக்கிறேன். அனைவருக்கும் நீதித் துறையிடமிருந்து எதிா்பாா்ப்புகள் உள்ளன. ஆனால், நீதிமன்றங்களின் உதவியைப் பெறுவதில் பொதுவான தயக்கம் உள்ளது. நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க இந்த நிலையை மாற்ற வேண்டும்.

நீதிமன்றங்களில் வழக்கு தொடருவது செலவு குறைந்ததாக இருக்க வேண்டும்; சாமானிய மக்கள் புரிந்துகொள்ளும் மொழியில் தீா்ப்புகள் இருக்க வேண்டும்; நலிவடைந்த பிரிவினருக்கு நீதி கிடைக்க வேண்டும். அனைத்துத் தரப்பினரும் தமது சிந்தனை, பணிக் கலாசாரத்தில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் முக்கியத்துவம், கல்வி மையமான நகரம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு உத்தர பிரதேச தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தை இங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டது. சட்டத்தின் அடிப்படையிலான நடைமுறையை வலுப்படுத்துவதில் தரமான சட்டக் கல்வி முக்கியமான பங்கு வகிக்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com