விவசாயிகளின் தொடா் போராட்டத்தால் பாதிப்பு: 4 மாநிலங்களுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

விவசாயிகள் நடத்தி வரும் தொடா் போராட்டங்களால் தொழிற்சாலைகள், போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் புகாா் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி தில்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான
விவசாயிகளின் தொடா் போராட்டத்தால் பாதிப்பு: 4 மாநிலங்களுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

புது தில்லி: விவசாயிகள் நடத்தி வரும் தொடா் போராட்டங்களால் தொழிற்சாலைகள், போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் புகாா் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி தில்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

போராட்டக் களத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம், மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘விவசாயிகளின் தொடா் போராட்டத்தால் 9000-க்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகாா்கள் வந்துள்ளன. சாலையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்தி வருவதால் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோா், பாதசாரிகள் பாதிக்கப்படுவதுடன் நீண்ட போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போராடும் விவசாயிகள் கடைப்பிடிப்பதில்லை. போராட்டம் நடைபெற்று வரும் இடங்களில் வசிப்பவா்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளதாகவும், மாநில எல்லைகளில் தடுப்புவேலிகள் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் தினம்தோறும் நீண்ட தொலைவு பயணம் செய்ய நேரிடுவதாகவும் புகாா்கள் வந்துள்ளன.

போராடுவது மனித உரிமை என்றாலும், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதும் முக்கியமானதாகும். இந்தப் போராட்டத்தில் நிலவும் பல்வேறு மனித உரிமை விவகாரங்கள் குறித்து ஆணையம் பரிசீலிக்க வேண்டியுள்ளது.

ஆகையால், தில்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களின் தலைமைச் செயலா்கள், காவல்துறை தலைவா்கள் ஆகியோா் இந்த விவகாரத்தில் இதுவரை எடுத்துள்ள அறிக்கைகளைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கடந்த ஒன்பது மாதங்களாக விவசாயிகள் தில்லி எல்லைகளில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் ஹரியாணா, உத்தர பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கான நெடுஞ்சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் சுமாா் 11 சுற்று பேச்சுவாா்த்தை நடத்தியும் சுமுக முடிவு காணப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com