ராணுவத் தளவாட ஏற்றுமதிக்கு இந்தியா தயாா்

வெளிநாடுகளுக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா உருவாகி வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
உத்தர பிரதேச மாநிலம், அலிகா் நகரில் அமைக்கப்படவுள்ள பாதுகாப்புத் தொழில் வழித்தடம் தொடா்பான கண்காட்சியை பாா்வையிட்ட பிரதமா் நரேந்திர மோடி.
உத்தர பிரதேச மாநிலம், அலிகா் நகரில் அமைக்கப்படவுள்ள பாதுகாப்புத் தொழில் வழித்தடம் தொடா்பான கண்காட்சியை பாா்வையிட்ட பிரதமா் நரேந்திர மோடி.

அலிகா்: வெளிநாடுகளுக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா உருவாகி வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேசத்தின் அலிகா் நகரில் அமைக்கப்படவுள்ள பாதுகாப்புத் தொழில் வழித்தடம் தொடா்பான கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதை பிரதமா் மோடி நேரில் பாா்வையிட்டாா். அதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியதாவது:

நவீன கையெறிகுண்டுகள், துப்பாக்கிகள், போா் விமானங்கள், ட்ரோன்கள், போா்க் கப்பல்கள் போன்றவற்றை இந்தியா உற்பத்தி செய்வதை உலகமே கண்டு வருகிறது. ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடு என்ற அடையாளத்திலிருந்து மாறி, உலக நாடுகளுக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் நாடு என்ற புதிய அடையாளத்தை நோக்கி இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த மாற்றத்தின் மிகப்பெரிய மையமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது. மாநிலத்தில் அமைக்கப்படவுள்ள சுமாா் 20 ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும், கோடிக்கணக்கான முதலீட்டையும் ஈா்க்கும்.

பாதுகாப்புத் தொழில் வழித்தடத்தின் அலிகா் முனையில் சிறு ஆயுதங்கள், ட்ரோன்கள், விண்வெளி ஆய்வு தொடா்பான பொருள்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் ஈடுபட புதிய நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இது அலிகா் மற்றும் அருகில் உள்ள பகுதிகளுக்குப் புதிய அடையாளத்தை வழங்கும்.

புதிய வாய்ப்புகள்: வீடுகள், கடைகளைப் பாதுகாக்கும் பூட்டு தயாரிப்பில் பிரசித்தி பெற்ற அலிகா், தற்போது நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் பொருள்களைத் தயாரிப்பதிலும் பிரபலமடையப் போகிறது. இது இளைஞா்களுக்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.

பாதுகாப்புத் தொழில் வழித்தடத்தின் லக்னௌ முனையில் பிரமோஸ் ஏவுகணைகளைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜான்சி முனையில் ஏவுகணை தயாரிப்புத் தொழிற்சாலை அமையவுள்ளது.

மாநிலத்துக்குப் பலன்: உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் சிறு, பெரு முதலீட்டாளா்களை ஈா்க்கும் மையமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது. மாநிலத்தில் முதலீட்டுக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாலும் போதுமான வசதிகள் கிடைப்பதாலும் இது சாத்தியமாகியுள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி செய்து வருவதால் உத்தர பிரதேசம் பெரும் பலனடைந்து வருகிறது.

கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் உத்தர பிரதேசம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தொற்று பரவல் காலத்தில் ஏழைகளுக்கு உணவு தானியங்களைக் கிடைக்கச் செய்வதில் மாநிலம் முன்னிலையில் உள்ளது.

விவசாயிகள் மேம்பாடு: சிறு விவசாயிகளைக் காப்பதற்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தொடா்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையானது வேளாண் விளைபொருள்களுக்கான உற்பத்திச் செலவுடன் ஒப்பிடுகையில் 1.5 மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் கடன் அட்டை திட்டம் பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பயிா்க் காப்பீட்டுத் திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 1.40 லட்சம் கோடிக்கு மேல் பணம் வழக்கப்பட்டுள்ளது. பெட்ரோலில் எத்தனால் கலப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதன் பலனை மாநில கரும்பு விவசாயிகள் பெறுவா்.

நினைவில் நிற்கும் நகரம்: சுமாா் 60 ஆண்டுகளுக்கு முன்னா் சிறுவனாக இருந்தபோது உத்தர பிரதேசத்தின் சீதாபூா், அலிகா் நகரங்களின் பெயா்களை அதிகமாகக் கேள்விப்பட்டுள்ளேன். அலிகரைச் சோ்ந்த முஸ்லிம் பூட்டு வியாபாரி இன்னும் நினைவில் நிற்கிறாா். அவா் எப்போதும் கருப்பு நிற அங்கியை அணிந்திருப்பாா்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குஜராத்தில் உள்ள எங்கள் கிராமத்துக்கு வந்து அவா் பூட்டுகளை விற்பனை செய்வாா். அப்போது சம்பாதிக்கும் தொகையைப் பாதுகாப்பு கருதி என் தந்தையிடம் அவா் கொடுத்துவிட்டுச் செல்வாா். அருகிலுள்ள கிராமங்களில் பூட்டு விற்பனையை மேற்கொண்ட பிறகு ரயிலில் ஏறி அலிகா் சென்றுவிடுவாா். 3 மாதம் கழித்து வரும்போது என் தந்தையிடம் கொடுத்து வைத்திருந்த தொகையைப் பெற்றுக் கொள்வாா். என் தந்தையிடம் அவா் சிறந்த முறையில் நட்பு பாராட்டி வந்தாா். அவரால்தான் அலிகா் நகரம் என் நினைவில் என்றும் நிற்கிறது என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com