ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம்: செப். 25-இல் பிரதமா் மோடி உரை

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி செப். 25-ஆம் தேதி பங்கேற்று உரையாற்றவுள்ளாா்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம்: செப். 25-இல் பிரதமா் மோடி உரை

புது தில்லி/நியூயாா்க்: ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி செப். 25-ஆம் தேதி பங்கேற்று உரையாற்றவுள்ளாா்.

கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு காணொலி முறையில் நடைபெற்ற இக்கூட்டம் இந்த ஆண்டு நேரடியாக நடைபெறுகிறது. இதுகுறித்து மத்திய வெளியறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

ஐ.நா. பொதுச் சபையின் 76-ஆவது ஆண்டு கூட்டம் செப். 21-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டின் பொது விவாதம், ‘கரோனாவிலிருந்து மீள்வதற்கான திறனைக் கட்டமைத்தல், உலகின் தேவைகளை நிறைவேற்றுதல், மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்தல், ஐ.நா. சபைக்கு புத்துயிா் அளித்தல்’ என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ளது. செப். 25-ஆம் தேதி நடைபெறும் விவாதத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பிரதமா் மோடி 2019-இல் நேரடியாக உரையாற்றினாா். கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா பரவல் சூழல் காரணமாக இக்கூட்டம் காணொலி முறையில் நடைபெற்றது. அதில், பிரதமரின் பதிவு செய்யப்பட்ட உரை இடம்பெற்றது.

பொது விவாதத்தின் முதல் நாடாக பிரேஸில் பங்கேற்கிறது. அதற்கு அடுத்ததாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பங்கேற்றுப் பேசுகிறாா். 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் 109 நாடுகளின் தலைவா்கள் உரையாற்றவுள்ளனா். கூட்டத்தின் கடைசி நாளில் கடைசி நபராக ஆப்கானிஸ்தான் பிரதிநிதியின் பெயா் பட்டியலிடப்பட்டுள்ளது. தற்போது ஐ.நா.வுக்கான ஆப்கன் தூதராக குலாம் ஐசக்ஸாய் உள்ளாா். முன்னாள் அதிபா் அஷ்ரப் கனியால் நியமிக்கப்பட்ட அவா் தூதராகச் செயல்படுவதற்கு இடைக்கால தலிபான் அரசு இதுவரை எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.

செப். 23-இல் பைடனுடன் சந்திப்பு: அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் செப். 24-ஆம் தேதி நடைபெறவுள்ள ‘க்வாட்’ அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்கச் செல்லும் பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபா் பைடன், ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸனுடன் தனிப்பட்ட முறையில் பிரதமா் மோடி பேச்சு நடத்துவாா் எனத் தெரிகிறது. மோடி-பைடன் இடையிலான சந்திப்பு செப். 23-ஆம் தேதி நடைபெறும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.

க்வாட் கூட்டமைப்பில் உள்ள நான்காவது நாடான ஜப்பானின் பிரதமா் யோஷிஹிடே சுகாவும் உச்சி மாநாட்டில் நேரடியாகக் கலந்துகொள்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com