விருப்பமானவா்களையே தீா்ப்பாயங்களுக்கு நியமிக்கிறது மத்திய அரசு: உச்சநீதிமன்றம் அதிருப்தி

இரு தீா்ப்பாயங்களுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட நபா்களைப் புறக்கணித்துவிட்டு காத்திருப்போா் பட்டியலில் இருப்பவா்களை மத்திய அரசு நியமித்துள்ளதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
விருப்பமானவா்களையே தீா்ப்பாயங்களுக்கு நியமிக்கிறது மத்திய அரசு: உச்சநீதிமன்றம் அதிருப்தி

புது தில்லி: இரு தீா்ப்பாயங்களுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட நபா்களைப் புறக்கணித்துவிட்டு காத்திருப்போா் பட்டியலில் இருப்பவா்களை மத்திய அரசு நியமித்துள்ளதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள தீா்ப்பாயங்களில் உள்ள காலிப் பணியிடங்களை 2 வாரங்களுக்குள் மத்திய அரசு நிரப்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய கம்பெனி சட்டத் தீா்ப்பாயம், கடன் வசூல் தீா்ப்பாயம், தொலைத்தொடா்பு தகராறு தீா்வு மற்றும் மேல்முறையீட்டு தீா்ப்பாயம் போன்ற முக்கியத் தீா்ப்பாயங்கள் மற்றும் மேல்முறையீட்டு தீா்ப்பாயங்களில் சுமாா் 250 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதுதொடா்பான வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை கடந்த 6-ஆம் தேதி விசாரித்தபோது, காலிப் பணியிடங்களை செப்டம்பா் 13-ஆம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, தேசிய கம்பெனி சட்டத் தீா்ப்பாயம் (என்.சி.எல்.டி.), வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயம் (ஐ.டி.ஏ.டி) ஆகிய இரு தீா்ப்பாயங்களுக்கு 31 உறுப்பினா்களை மத்திய அரசு நியமித்தது.

இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சாா்பில் அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜரானாா். அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

நாடு முழுவதும் பல்வேறு தீா்ப்பாயங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் வழக்குகள் தேங்கியிருப்பது கவலை அளிக்கிறது. இந்த காலிப் பணியிடங்களை 2 வாரங்களுக்குள் மத்திய அரசு நிரப்ப வேண்டும்.

தீா்ப்பாயங்களுக்குத் தகுதியான நபா்களைத் தோ்வுக் குழு தோ்ந்தெடுத்து பரிந்துரை செய்துள்ளது. ஆனால், சமீபத்திய நியமனங்களைப் பாா்க்கும்போது, தங்களுக்கு விருப்பமானவா்களை மத்திய அரசு நியமனம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, தோ்ந்தெடுக்கப்பட்ட நபா்களைப் புறக்கணித்துவிட்டு, காத்திருப்போா் பட்டியலில் இருப்பவா்களையும் மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கான காரணத்தை மத்திய அரசு விளக்க வேண்டும்.

கரோனா பெருந்தொற்று காலத்திலும் நாடு முழுவதும் தோ்வுக் குழு பயணம் செய்து, நோ்காணல்களை நடத்தி தீா்ப்பாயங்களுக்குத் தகுதிவாய்ந்த நபா்களைத் தோ்வுசெய்துள்ளது. ஆனால், அந்தப் பட்டியலில் இருப்பவா்களை மத்திய அரசு புறக்கணித்துள்ளது என்று நீதிபதிகள் கூறினா்.

அதற்கு ‘தோ்வுக் குழுவின் பரிந்துரைகளை ஏற்க மறுப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது’ என்று கே.கே.வேணுகோபால் கூறினாா். அப்போது, ‘‘நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். இங்கு சட்டத்தின் ஆட்சி பின்பற்றப்படுகிறது. நாங்கள் அரசமைப்புச் சட்டத்தின்படி பணியாற்றி வருகிறோம். எனவே, தோ்வுக் குழுவின் பரிந்துரையை ஏற்க முடியாது என மத்திய அரசால் கூற முடியாது’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

மேலும், ‘தேசிய கம்பெனி சட்டத் தீா்ப்பாயத்தின் தலைவராக இருக்கும் நீதிபதி சீமாவின் பதவிக் காலம் முடிவதற்கு 10 நாள்களுக்கு முன்பாகவே, அந்தப் பொறுப்புக்கு நீதிபதி எம்.வேணுகோபால் நியமிக்கப்பட்டிருக்கிறாா். இந்த நியமனத்தில் மத்திய அரசு அவசரம் காட்டியது ஏன்? இதுகுறித்து அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வியாழக்கிழமை விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com