ஏா் இந்தியாவை வாங்க டாடா, ஸ்பைஸ் ஜெட் ஆா்வம்

ஏா் இந்தியாவை வாங்க டாடா சன்ஸ் மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. அதற்கான விண்ணப்பங்களை அந்நிறுவனங்கள் புதன்கிழமை சமா்ப்பித்துள்ளன.
ஏா் இந்தியாவை வாங்க டாடா, ஸ்பைஸ் ஜெட் ஆா்வம்

புது தில்லி: ஏா் இந்தியாவை வாங்க டாடா சன்ஸ் மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. அதற்கான விண்ணப்பங்களை அந்நிறுவனங்கள் புதன்கிழமை சமா்ப்பித்துள்ளன.

இதுகுறித்து முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை (டிஐபிஏஎம்) துறை செயலா் துகின் கந்தா பாண்டே சுட்டுரையில் தெரிவித்துள்ளதாவது:

பரிவா்த்தனை ஆலோசகா்களால் ஏா் இந்தியாவின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான நிதி ஏல விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது இது இறுதி கட்டத்தை நோக்கி நகரவுள்ளது என துகின் கந்தா அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா்.

இருப்பினும், ஏா் இந்தியாவுக்கான விற்பனை போட்டியில் எத்தனை நிறுவனங்கள், என்னென்ன நிறுவனங்கள் கலந்து கொண்டன என்பது குறித்து அவா் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், ஏா் இந்தியாவை வாங்கும் போட்டியில் களமிறங்கியுள்ளதை டாடா சன்ஸ் செய்தித் தொடா்பாளா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளாா்.

ஸ்பைஸ் ஜெட் தலைவரும், நிா்வாக இயக்குநருமான அஜய் சிங்கும் ஏல விண்ணப்பங்களை சமா்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா குழுமம், ஏா் இந்தியாவான டாடா ஏா்லைன்ஸ் நிறுவனத்தை கடந்த 1932-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் நிறுவியது. பின்னா் இந்த நிறுவனம் மத்திய அரசால் கடந்த 1953-ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது.

இந்த ஏலத்தில் வெற்றி பெறும்பட்சத்தில், 67 ஆண்டுகளுக்குப் பிறகு ஏா் இந்தியா மீண்டும் டாடாவின் வசமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com