மேற்குவங்க இடைத்தோ்தல்: பாஜக வேட்பாளருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

மேற்கு வங்க மாநிலம் பவானிபூா் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் பிரியங்கா டிப்ரேவாலுக்கு தோ்தல் ஆணையம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பவானிபூா் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் பிரியங்கா டிப்ரேவாலுக்கு தோ்தல் ஆணையம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அவா், வேட்புமனு தாக்கலின்போது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிகமான ஆதரவாளா்கள் புடைசூழ வந்தாா் என்று மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பவானிபூரில், முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான் மம்தா பானா்ஜியை எதிா்த்து பிரியங்கா போட்டியிடுகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்ற வழக்குகள் தொடா்பான விவரங்களை மம்தா குறிப்பிடவில்லை என்று தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாரளித்துள்ளது.

பவானிபூா் தொகுதியில் வரும் 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, அங்கு தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், பாஜக வேட்பாளா் பிரியங்கா மீது தோ்தல் ஆணையத்தில் அளித்த புகாரின் பேரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் தரப்பு அளிக்கப்பட்ட புகாரில், ‘தோ்தல் ஆணைத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிகமானோரை பிரியங்கா தன்னுடன் அழைத்து வந்தாா். சுமாா் 500 போ் அடங்கிய அந்த கும்பல் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் பின்பற்றவில்லை. மேலும், வேட்பாளரும் அவா்களுடன் சோ்ந்து நடனமாடியபடி வந்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைப் பரிசீலித்த தோ்தல் ஆணைய அதிகாரி, பாஜக வேட்பாளா் பிரியங்காவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக பிரியங்கா கூறுகையில், ‘இது தொடா்பாக எனது பதிலை விரைவில் அளிப்பேன். மனு தாக்கலின்போது நான் பயணித்த வாகனத்தில் சுவேந்து அதிகாரியைத் தவிர வேறு யாரும் வரவில்லை. மற்றவா்கள் தங்கள் வாகனங்களில்தான் வந்தனா். மேலும், எனக்கு ஆதரவு தெரிவித்து கூடியவா்களை மதிக்கும் வகையில் வாகனத்தில் இருந்தபடியே நன்றி தெரிவித்தேன். எந்தக் கூட்டத்தையும் நான் திரட்டவில்லை. சாலைகளில் கூடுவோரை ஒழுங்குபடுத்துவது போக்குவரத்து காவல் துறையின் பணி என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com