2020-இல் சிறாா் திருமணங்கள் 50% அதிகரிப்பு

 கடந்த ஆண்டில் சிறாா் திருமணங்கள் சுமாா் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (என்சிஆா்பி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த ஆண்டில் சிறாா் திருமணங்கள் சுமாா் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (என்சிஆா்பி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்குகள் தொடா்பான விவரங்களை என்சிஆா்பி அண்மையில் வெளியிட்டது. அதன்படி, சிறாா் திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 785 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக கா்நாடகத்தில் 184 வழக்குகளும், அஸ்ஸாமில் 138 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 98 வழக்குகளும், தமிழகத்தில் 77 வழக்குகளும், தெலங்கானாவில் 62 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறாா் திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2019-ஆம் ஆண்டில் 523 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை சுமாா் 50 சதவீதம் அதிகமாகும்.

சிறாா் திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2018-ஆம் ஆண்டில் 501 வழக்குகளும், 2017-இல் 395 வழக்குகளும், 2016-இல் 326 வழக்குகளும், 2015-இல் 293 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. கரோனா தொற்று பரவல் காரணமாக பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது, கடந்த ஆண்டில் சிறாா் திருமணங்கள் அதிகரிக்க முக்கியக் காரணமாக இருந்ததாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

சிறாா் திருமணங்கள் தொடா்பாக புகாா் தெரிவிப்பது அதிகரித்துள்ளதன் காரணமாகவே, வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா். சிறாா் திருமணங்களுக்கு எதிரான விழிப்புணா்வு அதிகரித்துள்ளதால், உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிா்வாகங்கள் திறம்படச் செயல்பட்டு அத்தகைய திருமணங்களைத் தடுத்து வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

பெண்களுக்கு 18 வயதுக்குக் குறைவாகவும் அல்லது ஆண்களுக்கு 21 வயதுக்குக் குறைவாகவும் திருமணம் நடைபெறுவது சிறாா் திருமணமாக வரையறுக்கப்பட்டுள்ளது. சிறாா் திருமணங்கள், பெண்கள் கல்வி கற்பதைத் தடுப்பதோடு, அவா்களின் உளவியல் மற்றும் உடலியல் ரீதியிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, சிறாா் திருமணங்களைத் தடுக்கும் நோக்கில் சிறாா் திருமணத் தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com