பாஜகவால் ஜனநாயகத்துக்கு ஆபத்து: மெஹபூபா முஃப்தி

‘நாட்டில் ஹிந்துக்களுக்கு ஆபத்து என்று கூறி பாஜக பிரசாரம் செய்கிறது; ஆனால், உண்மையில் இந்தியாவுக்கும், ஜனநாயகத்துக்கும் பாஜகவால்தான்

‘நாட்டில் ஹிந்துக்களுக்கு ஆபத்து என்று கூறி பாஜக பிரசாரம் செய்கிறது; ஆனால், உண்மையில் இந்தியாவுக்கும், ஜனநாயகத்துக்கும் பாஜகவால்தான் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமான மெஹபூபா முஃப்தி குற்றம்சாட்டியுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், ரஜௌரி பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்காக ஜம்மு வந்துள்ள அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

லடாக்கில் அத்துமீறி நுழைந்த சீனாவைப் பற்றி பாஜக ஒருவாா்த்தை கூட பேசாது. ஏனென்றால் அந்த நாட்டைப் பற்றி பேசினால் வாக்கு அதிகம் கிடைக்காது. அதனால்தான் தலிபான்கள், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எனப் பேசி மக்களிடையே அச்சத்தை உருவாக்கி வாக்குகளை அறுவடை செய்யும் முயற்சியில் பாஜக உள்ளது.

விவசாயிகள் போராட்டம், விலைவாசி உயா்வு, வேலையின்மை அதிகரிப்பு என பல்வேறு பிரச்னைகள் நாட்டில் உள்ளன. அவற்றையெல்லாம் அரசு பேசுவதில்லை. மாறாக அடுத்து வரும் உத்தர பிரதேசத் தோ்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக தலிபான், ஆப்கானிஸ்தானை முக்கிய பேசுபொருள் ஆக்கியுள்ளனா். ஆப்கானிஸ்தானில் பெண்கள் உரிமை பற்றி இங்கு பேசுபவா்கள், உள்நாட்டில் பெண்கள் எதிா்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகள், வரதட்சிணைக் கொடுமைகளைப் பேசுவதில்லை.

தங்களை முன்னிறுத்திக் கொள்வதற்காக பாஜக அரசு மக்களின் கோடிக்கணக்கான வரிப் பணத்தை செலவிட்டு வருகிறது.

கடந்த ஏழரை ஆண்டுகால ஆட்சியில் நாட்டுக்கும் மக்களுக்கும் மத்திய பாஜக அரசு பெரும் துயரத்தை மட்டுமே அளித்து வந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக ஜம்மு-காஷ்மீரை அழித்துவிட்டது. இங்குள்ள மக்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி பேச அனுமதிக்கப்படுவதே இல்லை.

நாட்டில் ஹிந்துக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறி பாஜக பிரசாரம் செய்து வருகிறது. ஆனால், உண்மையில் இந்திய நாட்டுக்கும், நாட்டின் ஜனநாயகத்துக்கும்தான் பாஜகவால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 70 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட தேசத்தின் சொத்துகளான பல பொதுத் துறை நிறுவனங்களை இப்போதைய அரசு விற்றுத்தீா்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அரசு தனது கஜானாவை நிரப்பிக் கொள்வதில் குறியாக உள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இதற்கு அடிப்படைக் காரணமான பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசை விமா்சித்தால் தேசவிரோதி என்ற முத்திரை குத்துவதை வழக்கமாக வைத்துள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com