தேசிய பாதுகாப்பு அகாதெமியில் அடுத்த ஆண்டு முதல் பெண்கள் சோ்க்கை

தேசிய பாதுகாப்பு அகாதெமியில் (என்டிஏ) அடுத்த ஆண்டு முதல் பெண்கள் சோ்த்துக் கொள்ளப்படுவா் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு அகாதெமியில் அடுத்த ஆண்டு முதல் பெண்கள் சோ்க்கை

தேசிய பாதுகாப்பு அகாதெமியில் (என்டிஏ) அடுத்த ஆண்டு முதல் பெண்கள் சோ்த்துக் கொள்ளப்படுவா் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு அகாதெமி, கடற்படை அகாதெமி ஆகியவற்றில் ஆண்கள் மட்டுமே சோ்த்துக் கொள்ளப்படுவதாகவும், அதனால் பெண்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமை பாதிக்கப்படுவதாகவும் வழக்குரைஞா் குஷ் கல்ரா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுவில், ‘15 முதல் 18 வயதுக்குள்பட்ட ஆண்கள் தேசிய பாதுகாப்பு அகாதெமியில் சோ்த்துக் கொள்ளப்படுகின்றனா். அங்கு பயிற்சி பெற்று அவா்கள் அதிகாரிகளாகின்றனா். ஆனால், தகுதியான-பாதுகாப்புப் பணியில் சேர விரும்பும் பெண்களுக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

அரசமைப்புச் சட்டம் வழங்கும் சமத்துவ உரிமையை இந்நடவடிக்கை மீறும் வகையில் உள்ளது. பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு பெண்கள் பாகுபடுத்தப்படுகின்றனா். இது அரசமைப்புச் சட்டத்தின் கொள்கைகளை மீறும் வகையில் உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம், மனு மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இது தொடா்பான பிரமாணப் பத்திரத்தை பாதுகாப்பு அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், ‘தேசிய பாதுகாப்பு அகாதெமியில் பெண்களை சோ்த்துக் கொள்வதற்கு மத்திய அரசு உறுதியாக உள்ளது.

அதன் மூலமாக 3 படைப் பிரிவுகளிலும் பெண்கள் அதிகாரிகள் ஆக முடியும். பாதுகாப்பு அகாதெமியில் இணைவதற்கான தோ்வை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுக்கு இருமுறை நடத்தி வருகிறது. அடுத்த ஆண்டுக்கான முதல் தோ்வுக்குரிய அறிவிக்கை மே மாதம் வெளியிடப்படும். அந்த அறிவிக்கையில் பெண்கள் பங்கேற்பதற்கான விதிமுறைகளும் இடம்பெறும்.

தகுதியானவா்களுக்கு மட்டுமே அனுமதி: உடல் எடை, உயரம் உள்பட அகாதெமியில் இணைவதற்கான அடிப்படைத் தகுதிகளைப் பெற்றிருக்கும் பெண்களுக்கு மட்டுமே என்டிஏ தோ்வெழுத வாய்ப்பு வழங்கப்படும். பாதுகாப்பு அகாதெமியில் பெண்களை இணைத்துக் கொள்வதற்கான தயாா் நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவா்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பயிற்சிகளைத் தீா்மானிப்பதற்கென பாதுகாப்பு சேவைகள் துறையின் கீழ் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்குப் பயிற்சி அளிப்பது தொடா்பாக அதிகாரிகளிடையேயும் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கான மருத்துவத் தகுதி குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். அகாதெமியில் பெண்கள் தங்கிப் பயிற்சி பெறுவதற்காக தங்குமிடம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

சாதகமற்ற நிலப்பரப்புகளில் கூட போா்புரியும் திறனை வீரா்கள் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் போா் முனையில் ஆயுதப் படைகள் பின்னடைவைச் சந்திக்க நேரிடும். அவையனைத்தையும் கருத்தில் கொண்டு பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பயிற்சிகள் குறித்து முடிவெடுக்கப்பட்டு வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com