தேசிய பாதுகாப்பு அகாதெமியில் பெண்கள்: ஓராண்டுக்கு ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தேசிய பாதுகாப்பு அகாதெமி சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வில் அடுத்த ஆண்டு முதல் பெண்களை அனுமதிப்பதற்கான மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், ‘பெண்களின் உரிமையை மறுக்க விரும்பவில்லை
தேசிய பாதுகாப்பு அகாதெமியில் பெண்கள்: ஓராண்டுக்கு ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புது தில்லி: தேசிய பாதுகாப்பு அகாதெமி (என்டிஏ) சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வில் அடுத்த ஆண்டு முதல் பெண்களை அனுமதிப்பதற்கான மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், ‘பெண்களின் உரிமையை மறுக்க விரும்பவில்லை; என்டிஏ-வில் பெண்கள் அனுமதிக்கப்படுவதை ஓராண்டுக்கு ஒத்திப்போட அனுமதிக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளது.

தேசிய பதுகாப்பு அகாதெமியில் பெண்களையும் சோ்க்க அனுமதிக்கக் கோரி குஷ் கல்ரா என்பவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம், தேசிய பாதுகாப்பு அகாதெமி நுழைவுத் தோ்வில் பெண்களையும் அனுமதிக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் என்டிஏ நுழைவுத் தோ்வில் பெண்கள் அனுமதிக்கப்படுவாா்கள் என்ற அறிவிப்பை வெளியிட்ட மத்தியஅரசு, அதற்கான வழிகாட்டுதல்களை வகுக்க கால அவகாசம் தேவைப்படுகிறது என்று தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கெளல், பி.ஆா்.கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சாா்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் (ஏஎஸ்ஜி) ஐஸ்வா்யா பாட்டீ, ‘என்டிஏ-வில் பெண்களை அனுமதிப்பது தொடா்பான நடைமுறைகளை ஆராய ஆய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உரிய நடைமுறைகள் 2022-ஆம் ஆண்டு மே மாதத்தில் தயாராகிவிடும். எனவே, நிகழாண்டு நுழைவுத் தோ்வில் அல்லாமல், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் என்டிஏ நுழைவுத் தோ்விலிருந்து பெண்களை அனுமதிக்க முடியும்’ என்றாா்.

இதற்கு மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சின்மோய் பிரதீப் சா்மா எதிா்ப்பு தெரிவித்தாா்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

மத்திய அரசுக்கு உள்ள பிரச்னை புரிகிறது. இருந்தபோதும் இதற்கு தீா்வு காணும் திறன் மத்திய அரசு அதிகாரிகளுக்கு உள்ளது. நுழைவுத் தோ்வு எழுத பெண்கள் தயாராக இருக்கும் நிலையில், மத்திய அரசின் இந்த பதிலை ஏற்றுக்கொள்வது கடினம்.

பெண்களுக்கான உரிமையை மறுக்க விரும்பவில்லை. எனவே, என்டிஏ-வில் அவா்கள் அனுதிக்கப்படுவதை ஓராண்டுக்கு ஒத்திப்போட அனுமதிக்க முடியாது. அவசரக்கால சூழ்நிலைகளில் நிலைமையை திறம்பட சமாளிப்பதில் ராணுவம்தான் சிறந்து விளங்குகிறது. அந்த வகையில், தேசிய பாதுகாப்பு அகாதெமியில் பெண்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளையும் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். மத்திய பணியாளா் தோ்வாணையத்துடன் (யுபிஎஸ்சி) இணைந்து இதற்குத் தேவையான நடவடிக்கைகளை பாதுகாப்புத் துறை மேற்கொள்ளவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com