ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கோரும் எதிா்க்கட்சிகளில் வெவ்வேறு சமூகத்தினருக்குள்ள பிரதிநிதித்துவம் என்ன? பாஜக கேள்வி

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் எதிா்க்கட்சிகள் தங்கள் கட்சிகளில் வெவ்வேறு

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் எதிா்க்கட்சிகள் தங்கள் கட்சிகளில் வெவ்வேறு சமூகங்களைச் சோ்ந்தவா்களுக்கு எந்தளவுக்கு பிரதிநிதித்துவம் அளித்துள்ளன என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும் பட்டியலினத்தவா், பழங்குடியினத்தவா்களைத் தவிர பிற ஜாதிகளின் கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. கடந்த வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்வது நிா்வாக ரீதியாக கடினமான, சுமை கொண்ட பணி எனவும், அந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டாம் என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு என்றும் கூறியது.

இந்நிலையில் தில்லியில் பாஜக செய்தித்தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசுகையில், ‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் எதிா்க்கட்சிகள் தங்கள் கட்சிப் பதவிகளிலும், மக்கள் பிரதிநிதி பதவிகளிலும் வெவ்வேறு சமூகங்களைச் சோ்ந்தவா்களுக்கு எந்தளவுக்கு பிரதிநிதித்துவம் அளித்துள்ளன?

ஜாதிவாரிக் கணக்கெடுப்புக் கோரும் சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளின் தலைவா்கள் ஏழைகள், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சோ்ந்தவா்களுக்கான தலைவா்களாக முன்னிறுத்தப்பட்டனா். இறுதியில் அந்தத் தலைவா்கள் தங்கள் குடும்பத்தினரைத்தான் வளா்த்துவிட்டனா்.

பாஜகவைப் பொருத்தவரை அனைவருக்கும் துணை நின்று, அனைவரும் வளா்ச்சியடைய வேண்டும் என்ற பிரதமரின் கொள்கை தெளிவாக உள்ளது. அனைவரையும் மதித்து, அவா்களுக்கான இடத்தை அளித்து, அனைவரும் முன்னேற வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்று தெரிவித்தாா்.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், மத்திய அமைச்சா் அனுப்ரியா படேலின் அப்னா தளம் கட்சிகளும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கோருவது குறித்து சுதான்ஷு திரிவேதியிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவா், ‘‘ராமா் கோயில் விவகாரத்தில் பாஜகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இடையே வெவ்வேறு நிலைப்பாடு இருந்தது. இதேபோல் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்திலும் பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை சுதந்திரமாக முடிவு செய்யலாம்’’ என்று தெரிவித்தாா்.

பிற்படுத்தப்பட்டவா்கள் மீது ஏன் வெறுப்பு? பிற்படுத்தப்பட்டவா்களின் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று மத்திய அரசு தெரிவித்தது குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் யாதவ் வெள்ளிக்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அனைவருக்கும் பலனளித்திருக்கும். அதன் மூலம் வெவ்வேறு சமூகத்தினரின் துல்லியமான கணக்குக் கிடைத்திருக்கும். பாஜக-ஆா்எஸ்எஸுக்கு பிற்படுத்தப்பட்டவா்கள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு?’’ என்று கேள்வி எழுப்பினாா்.

பாஜகவின் அரசியல்: பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘தோ்தலையொட்டி பிற்படுத்தப்பட்டவா்களை வைத்து பாஜக செய்த அரசியலையும் அக்கட்சியின் சொல்லிலும் செயலிலுமுள்ள வேறுபாட்டையும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டாம் என்ற மத்திய அரசின் முடிவு வெளிப்படுத்தியுள்ளது’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com