மருத்துவப் படிப்புகளில் 10% ஒதுக்கீடு: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு தள்ளுபடி

மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழான இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான
கோப்புப்படம்
கோப்புப்படம்

மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழான இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான (இடபிள்யூஎஸ்) 10 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்ற அனுமதியை மத்திய அரசு பெறவேண்டும் என்ற சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. ‘இந்த விவகாரத்தில் தனது அதிகார வரம்பை சென்னை உயா்நீதிமன்றம் மீறியுள்ளது’ என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.

வழக்கு என்ன?: நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ், எம்டிஎஸ், எம்டி, எம்எஸ், மருத்துவ பட்டயப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டிலான இடங்களில் 27 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (ஓபிசி), 10 சதவீதம் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு தீா்மானித்து, அதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 29-ஆம் தேதி வெளியிட்டது.

இந்த அறிவிப்பை எதிா்த்து தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த இடஒதுக்கீடு மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறை அமலில் உள்ளது. அதன்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின் கிடைத்த இந்த இடஒதுக்கீட்டை மத்திய அரசு பறிக்கக் கூடாது. மேலும் மாநிலங்களுக்கு ஒப்படைக்கும் இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்குவது சட்டவிரோதம்’ என்று வாதிட்டாா்.

சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?: இந்த வாதங்களைக் கேட்ட உயா்நீதிமன்ற நீதிபதிகள், ‘அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மாதிரியாக இடஒதுக்கீடு பின்பற்ற முடியாது. எனவே, மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு என்பது அனுமதிக்கத்தக்கது.

அதே வேளையில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு என்பது, மொத்த இடஒதுக்கீட்டு அளவான 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதால், உச்சநீதிமன்ற ஒப்புதல் இல்லாமல் அனுமதிக்க முடியாது. எனவே, இந்த கூடுதலான 10 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்ற அனுமதியை மத்திய அரசு பெற வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

மத்திய அரசு மேல்முறையீடு: இந்த உத்தரவை எதிா்த்து மத்திய அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு தள்ளுபடி: உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமா்வின் அனுமதியை மத்திய அரசு பெற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் செல்லத்தக்க நிலையை சவால் விடுவது போன்ாகும். இது உயா்நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறிய செயலாகும். நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரிக்கும்போது, அதன் அதிகார வரம்பை உயா்நீதிமன்றம் மீற முடியாது என்று கூறி, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேல்முறையீட்டு மனு முடித்துவைப்பு: அதே நேரம், ‘சென்னை உயா்நீதிமன்றம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை முழுமையாகத் தள்ளுபடி செய்யவில்லை எனவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடுக்கு உச்சநீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்பது தொடா்பான உயா்நீதிமன்ற கருத்து மட்டுமே தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தெளிவுபடுத்திய நீதிபதிகள், மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

அக்.7-இல் விசாரணை: மேலும், மருத்துவப் படிப்புகள் இடஒதுக்கீடு தொடா்பான மத்திய அரசின் ஜூலை 29-ஆம் தேதி அறிவிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பல்வேறு மனுக்கள் வரும் அக்டோபா் 7-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். எனவே, இந்த மனுக்களுக்கு ஒருங்கிணைந்த பதில் மனுக்களை அக்டோபா் 6-ஆம் தேதிக்குள்ளாக தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு சாா்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் (ஏஎஸ்ஜி) கே.எம்.நடராஜுக்கு அறிவுறுத்தல் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com