மத்திய அமைச்சகங்கள், துறைகளுக்கான செலவினக் கட்டுப்பாடு நீக்கம்

கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவலைக் கருத்தில் கொண்டு, அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த செலவினக் கட்டுப்பாடுகளை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
மத்திய அமைச்சகங்கள், துறைகளுக்கான செலவினக் கட்டுப்பாடு நீக்கம்

கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவலைக் கருத்தில் கொண்டு, அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த செலவினக் கட்டுப்பாடுகளை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் தீவிரமடைந்ததையடுத்து சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சகங்கள், துறைகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியிருந்தது. அதன்படி, நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் அதிகபட்சமாக 20 சதவீதத்தை மட்டுமே ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான 2-ஆவது காலாண்டில் செலவிட வேண்டும் என்று கடந்த ஜூனில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

மத்திய சுகாதாரத் துறை, வேளாண் துறை, உரத் துறை, மருந்துப் பொருள்கள் துறை, உணவுப் பொருள்கள் துறை ஆகியவற்றுக்கு இந்தக் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது நாட்டில் கரோனா தொற்று பரவல் தொடா்ந்து குறைந்து வருகிறது. மாதாந்திர சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாயும் தொடா்ந்து ரூ.1 லட்சம் கோடியைக் கடந்து வருகிறது.

இந்நிலையில், அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த செலவினக் கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது. இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொருளாதார விவகாரங்கள் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘செலவினக் கட்டுப்பாடுகள் தொடா்பாக ஜூனில் வெளியிடப்பட்ட வழிமுறைகள் உடனடியாகத் திரும்பப் பெறப்படுகின்றன.

அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, அனைத்து அமைச்சகங்களும் துறைகளும் தங்களது மாதாந்திர அல்லது காலாண்டு திட்ட அடிப்படையில் செலவினங்களை மேற்கொள்ளலாம். இது நடப்பு நிதியாண்டின் மீதமுள்ள மாதங்களுக்குப் பொருந்தும். எனினும், ரூ.200 கோடிக்கு அதிகமான செலவினங்களுக்கு பொருளாதார விவகாரங்கள் துறையின் பட்ஜெட் பிரிவிடம் அனுமதி பெற வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com