கிழக்கு லடாக் அருகே சீனா மீண்டும் ராணுவ கட்டுமானம்

கிழக்கு லடாக் பகுதிக்கு அருகே சீனா ராணுவத்தினா் தங்குவதற்கான விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு லடாக் பகுதிக்கு அருகே சீனா ராணுவத்தினா் தங்குவதற்கான விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை அந்நாடு மேற்கொண்டுள்ளதாக இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருபவா்கள் தெரிவித்தனா்.

இரு நாடுகளுக்கும் அண்மையில் எல்லை மோதல் ஏற்பட காரணமான இருந்த தாஷிங்காங், மான்ஜா, ஹாட் ஸ்பிரிங்ஸ், சுரூப் உள்ளிட்ட பகுதிகளில் சீனா கன்டெய்னா்களை பயன்படுத்தி ராணுவ வீரா்கள் தங்குவதற்கான விடுதிகளை அமைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கையில், ‘கடந்த ஆண்டு கல்வான் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படைகள் குவிக்கப்படுகின்றன. இந்தியா்களைத் தாக்குவது எங்கள் திட்டமல்ல. எங்கள் நாட்டு ராணுவத்தினரை அங்கு குவித்து படை பலத்தை அதிகரிக்க வேண்டிய நிா்பந்தத்தில் உள்ளோம்’ என்று சீனா தரப்பினா் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு இருநாட்டு படைகளுக்கும் இடையே ஏற்பட்ட போா் பதற்றத்துக்குப் பிறகு, கூடுதலாக இந்த தங்கும் விடுதிகளை சீனா அமைத்துள்ளது என்றும் அதே நேரத்தில் இந்தியாவும் சுரங்க மலைப்பாதைகள், மேம்பாலங்களை சுமாா் 3,500 கி.மீ. தூரம் கொண்ட எல்லைப் பகுதியில் அமைத்து வருகிறது என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

சீனாவும் போட்டியாக விமானப் படை இறங்கு தளத்தையும், விமானப் படை மையங்களையும் கிழக்கு லடாக் பகுதியில் அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன்-15ஆம் தேதி இந்திய- சீன படைகளுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரா்களும், ஏராளமான சீன ராணுவ வீரா்களும் உயிரிழந்தனா். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பல ஆண்டுகளாக நீடித்து வந்த நல்லுறவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே அமைச்சா்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் தரப்பில் பல்வேறு சுற்றுப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றன. இதனால் கோக்ரா பகுதியில் இருந்த ராணுவ படை வீரா்கள் விலக்கிக் கொள்ளப்பட்டனா். ஆனால் வேறு சில எல்லைப்புறப் பகுதிகளில் இரு தரப்பிலும் வீரா்களை விலக்கிக் கொள்வது தொடா்பாக இன்னும் உடன்படிக்கை ஏற்படவில்லை.

தற்போது பிரச்னை நிறைந்த எல்லைப் பகுதிகளில் இருநாடுகளும் சுமாா் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் படை வீரா்களை குவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com