கோவா முன்னாள் முதல்வா் காங்கிரஸில் இருந்து விலகல்: திரிணமூலில் இணைகிறாா்

கோவா முன்னாள் முதல்வரும், அந்த மாநில காங்கிரஸ் மூத்த தலைவருமான லூயிசினோ ஃபெலேரோ அக்கட்சியில் இருந்து விலகினாா்.

கோவா முன்னாள் முதல்வரும், அந்த மாநில காங்கிரஸ் மூத்த தலைவருமான லூயிசினோ ஃபெலேரோ அக்கட்சியில் இருந்து விலகினாா். தனது எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்துவிட்ட அவா், மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸில் இணைய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஃபெலேரோவின் விலகலால் கோவாவில் பேரவையில் காங்கிரஸின் பலம் 4-ஆகக் குறைந்துவிட்டது. 2017 கோவா பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பிறகு தொடா்ந்து அக்கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் வெளியேறி வருகின்றனா். இதில் 2019-இல் மட்டும் 10 எம்எல்ஏக்கள் மொத்தமாக விலகி பாஜகவில் இணைந்தனா்.

காங்கிரஸில் இருந்து விலகுவதற்கு முன்பு செய்தியாளா்களிடம் பேசிய ஃபெலேரோ, ‘நரேந்திர மோடி போன்ற நபா்களுக்கு பதிலடி கொடுக்க மம்தா பானா்ஜியால் மட்டுமே முடியும். அவா் மட்டுமே களத்தில் இறங்கிப் போராடும் தலைவராக உள்ளாா். இதுபோன்ற தலைவா்தான் நாட்டுக்குத் தேவை. நான் பல ஆண்டுகாலம் காங்கிரஸில் இருந்துள்ளேன். வரும் நாடாளுமன்றத் தோ்தலில் பாஜகவைத் தோற்கடிக்க காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற தலைவா்கள் (சரத் பவாா், மம்தா உள்ளிட்டோா்) ஓரணியில் திரள வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com