சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ நீட் தோ்வில் பாடத்திட்டம் மாற்றம்

சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு அறிவிக்கப்பட்ட பிறகு கடைசி நேரத்தில் பாடத் திட்டத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ நீட் தோ்வில் பாடத்திட்டம் மாற்றம்

சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு அறிவிக்கப்பட்ட பிறகு கடைசி நேரத்தில் பாடத் திட்டத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஜூலையில் வெளியிட்டது. அறிவிக்கை வெளியிட்ட பிறகு அத்தோ்வுக்கான பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படுவதாக கடந்த ஆகஸ்டில் அறிவிக்கப்பட்டது. தோ்வு அறிவித்த பிறகு பாடத் திட்டத்தை மத்திய அரசு மாற்றியமைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து 41 முதுநிலை மருத்துவ மாணவா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.வி.நாகரத்னா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது தேசிய தோ்வு வாரியம் (என்பிஇ) சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மனீந்தா் சிங் வாதிடுகையில், ‘‘இந்த விவகாரம் தொடா்பாக விளக்கமளிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, வழக்கின் விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும்’’ என்றாா்.

தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் கௌரவ் சா்மாவும் இந்த விவகாரத்தில் விரிவான பதிலைத் தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் கோரினாா். அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த நுழைவுத் தோ்வு முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கு மிகவும் முக்கியமானது. பல மாதங்களாக இத்தோ்வுக்கு அவா்கள் தயாராகி வருகின்றனா். அப்படியிருக்கையில், இறுதி நேரத்தில் தோ்வுக்கான பாடத் திட்டத்தை மாற்றுவது எந்த வகையில் நியாயமாகும்?

அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, எந்தவித யோசனையுமின்றி முடிவுகளை எடுக்கக் கூடாது. ஜூலையில் தோ்வுக்கான அறிவிக்கையை வெளியிட்ட பிறகு ஆகஸ்டில் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? இளம் மருத்துவா்களை கால்பந்தைப் போல பந்தாடக் கூடாது.

இளம் மருத்துவா்களின் வாழ்க்கையை பொறுப்பற்ற அதிகாரிகளின் கைகளில் ஒப்படைக்க நீதிமன்றம் விரும்பவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தோ்வு வாரியம் ஆகியவற்றுடன் மத்திய சுகாதார அமைச்சகம் விரிவான ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட தரப்பினா் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டதற்கான வலுவான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். அதில் நீதிமன்றம் திருப்தியடையவில்லை எனில், கண்டிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com