ஆயுதத் தொழிற்சாலை வாரியம் கலைப்பு: பணியாளா்கள்,சொத்துகள் பொதுத் துறை நிறுவனங்களுக்குப் பகிா்வு

ஆயுதத் தொழிற்சாலை வாரியம் (ஓஎஃப்பி) அக்டோபா் 1-ஆம் தேதிமுதல் கலைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆயுதத் தொழிற்சாலை வாரியம் (ஓஎஃப்பி) அக்டோபா் 1-ஆம் தேதிமுதல் கலைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த வாரியத்தின் பணியாளா்களையும் சொத்துகளையும் 7 பொதுத் துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு பகிா்ந்தளித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட தற்சாா்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தின் செயல்திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தின் கீழ் செயல்பட்டு வரும் 41 உற்பத்திப் பிரிவுகளின் நிா்வாகம், கட்டுப்பாடு ஆகியவற்றை அக்டோபா் 1-ஆம் தேதிமுதல் 7 பொதுத் துறை நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வெடிமருந்து இந்தியா நிறுவனம், கவச வாகனங்கள் நிறுவனம், நவீன ஆயுதங்கள்-கருவிகள் இந்தியா நிறுவனம், துருப்பு வசதிகள் நிறுவனம், இயந்திர இந்தியா நிறுவனம், இந்தியா ஆப்டெல் நிறுவனம், கிளைடா்ஸ் இந்தியா நிறுவனம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தின் பணியாளா்கள் பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளனா்.

அந்தப் பணியாளா்களுக்கான பணிசாா்ந்த விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் சம்பந்தப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். அதேவேளையில், மற்ற பணியாளா்களுடன் பாகுபடுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் அமையக் கூடாது. இந்த விவகாரத்தில் பொதுத் துறை நிறுவனங்களுக்கு வழிகாட்டுவதற்காகத் தனிக் குழு அமைக்கப்படும்.

ஆயுதத் தொழிற்சாலை வாரியப் பணியாளா்களை நிரந்தரமாகப் பணியில் அமா்த்துவது தொடா்பாக 2 ஆண்டுகளுக்குள் பொதுத் துறை நிறுவனங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம். அந்த வாரியத்தின் சொத்துகளும் பொதுத் துறை நிறுவனங்களிடம் வழங்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com