ஐசியூவுக்குள் நுழைந்த எலி...நோயாளி மர்ம மரணம்...உண்மை என்ன?

இந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், சுவாச தீவிர சிகிச்சை பிரிவு தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டு மருத்துவமனை கண்காணிப்பாளர் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தெலங்கானா வாராங்கலில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சுவாச தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 38 வயது நபர் எலி கடித்த நிலையில், ஹைதராபாத் என்ஐஎம்எஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு உயிரிழந்தார்.

தெலங்கானாவின் புகழ்பெற்ற மருத்துவமனைகளில் ஒன்றாக உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் இப்படி நடந்திருப்பது பொது மக்களிடையேயும் நோயாளிகளிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து என்ஐஎம்எஸ் மருத்துவமனை இயக்குநர் மனோகர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "நோயாளி ஸ்ரீநிவாஸ், மதுபழக்கத்தால் பாதிக்கப்பட்டவர். அவரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. செயற்கை சுவாசக் கருவியின் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. பின்னர், இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டது. 

என்ஐஎம்எஸ் மருத்துவமனைக்கு அழைத்துவரும்போது மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, மோசமான இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் ஏற்பட்டிருந்தது. இம்மாதிரியான காரணங்களால்தான் அவர் உயிரிழந்தார். எலி கடித்ததால் உயிரிழக்கவில்லை" என்றார்.

நோயாளி ஸ்ரீநிவாஸின் சகோதரரான ஸ்ரீகாந்த் இதுகுறித்து கூறுகையில், "இந்த சம்பவம் மார்ச் 30ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. இது எங்களின் தலை விதி என நினைத்தோம். வேறு வழியே இல்லை அனுபவித்துதான் ஆக வேண்டும். ஆனால்,  எலி என் சகோதரரை கடித்ததால்தான் அவருக்கு அதிகமாக ரத்தம் வழிந்தது. அவர் படுத்திருந்த படுக்கை முழுவதும் ரத்தம். எனவே, புகார் அளித்தேன்" என்றார்.

இந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், சுவாச தீவிர சிகிச்சை பிரிவு தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டு மருத்துவமனை கண்காணிப்பாளர் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதையடுத்து, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை தலைவர் தயாகர், மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். மருத்துவமனையின் சுகாதார ஒப்பந்ததாரர் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com