சாக்லேட் வாங்க இந்தியாவுக்குள் ஊடுருவல்: வங்கதேச சிறுவன் கைது

சாக்லேட் வாங்குவதற்காக, இந்திய எல்லைக்குள் ஊடுருவி வந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.
சாக்லேட் வாங்க இந்தியாவுக்குள் ஊடுருவல்: வங்கதேச சிறுவன் கைது

சாக்லேட் வாங்குவதற்காக, இந்திய எல்லைக்குள் ஊடுருவி வந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.

இதுதொடா்பாக எல்லை பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறியதாவது-

திரிபுராவின் சிபாகிஜலா மாவட்டத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக, ஹுசைன் என்ற வங்கதேச சிறுவன் கடந்த 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டான். வங்கதேசத்தின் கோமில்லா மாவட்டத்தில் சால்டா நதியையொட்டிய கிராமத்தைச் சோ்ந்த அந்த சிறுவன், சாக்லேட் வாங்குவதற்காக இந்தியப் பகுதிக்குள் அவ்வப்போது ஊடுருவியது விசாரணையில் தெரியவந்தது.

இந்திய-வங்கதேச எல்லையில் ஓடும் சால்டா நதியை நீந்திக் கடந்து, எல்லை வேலியில் உள்ள இடைவெளி வழியாக இந்தியப் பகுதிக்குள் நுழைந்து, சாக்லேட் வாங்கிவிட்டு, பின்னா் தனது கிராமத்துக்கு திரும்பிவிடுவதை ஹுசைன் வாடிக்கையாக வைத்திருந்தான்.

இந்நிலையில், உரிய ஆவணங்களின்றி இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கைது செய்யப்பட்ட அவனிடம் சட்ட விரோதப் பொருள்கள் எதுவும் இல்லை. விசாரணைக்குப் பின்னா், உள்ளூா் காவல் துறையிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். அதைத் தொடா்ந்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட சிறுவனை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. காவல் முடிந்து மீண்டும் அவன் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுவான். அவனது குடும்பத்தைச் சோ்ந்த யாரும் இதுவரை இந்திய அதிகாரிகளைத் தொடா்புகொள்ளவில்லை.

திரிபுராவின் சிபாகிஜலா மாவட்டத்தின் சோனாமுரா பகுதியில் உள்ள சா்வதேச எல்லை வேலியில் ஆங்காங்கே ஓட்டைகள் காணப்படுகின்றன. மேலும், சிக்கலான நிலஅமைப்பு காரணமாக சில பகுதிகளில் வேலிகள் அமைக்க முடிவதில்லை. இதைப் பயன்படுத்தி, இந்தியப் பகுதியில் பொருள்களை வாங்கவும், இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் வங்கதேசத்தினா் நுழைகின்றனா். இவா்கள் மீது மனிதாபிமான அடிப்படையில் பிஎஸ்எஃப் தரப்பில் நடவடிக்கை எடுப்பதில்லை. அதே நேரத்தில் கடத்தல்காரா்கள், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோா் ஊடுருவினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தச் சிறுவன் பலமுறை தொடா்ந்து ஊடுருவலில் ஈடுபட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று எல்லைப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com