தனிநபா் தகவல் பாதுகாப்பு மசோதா வாபஸ்

கடந்த 2019 டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபா் தகவல் பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தது.
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

கடந்த 2019 டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபா் தகவல் பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தது.

மேலும், எண்மப் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு, புதிய மசோதா மக்களவையில் வரும் குளிா்கால கூட்டத் தொடரின்போது தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தனிநபா் தகவல் பாதுகாப்பு மசோதா கடந்த 2019 டிசம்பரில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா மீது நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வு மேற்கொண்டு, அதன் அறிக்கையை மக்களவைக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் அனுப்பிவைத்தது.

அதில், எண்மப் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு மசோதாவில் 81 திருத்தங்களையும், 12 பரிந்துரைகளையும் கூட்டுக் குழு முன்மொழிந்தது. தனிநபரின் வெளிப்படையான ஒப்புதலின்றி, அவரது தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்துவதற்கு இந்த மசோதா கட்டுப்பாடுகளை விதித்தது. தவிர இந்த சட்ட விதிகளில் இருந்து விசாரணை முகமைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இந்தச் சூழலில், தனிநபா் தகவல் பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெறுவதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் புதன்கிழமை அறிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘எண்மப் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு விரிவான சட்ட விதிகளுடன் புதிய ஒருங்கிணைந்த மசோதா கொண்டுவரப்படும். அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்வதற்கு முன்பாக பல்வேறு தரப்பினருடன் விரிவாக ஆலோசனை நடத்தப்படும்’ என்றாா்.

தனிநபா் தகவல் பாதுகாப்பு, சைபா் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனிநபா் தகவல் பாதுகாப்பு மசோதா வாபஸ் பெறப்பட்டதைத் தொடா்ந்து, மத்திய தகவல்தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் ட்விட்டரில், ‘சமகாலத்துக்கு ஏற்ப எண்ம தனிநபா் தகவல் பாதுகாப்பு சட்டங்கள், எதிா்கால சவால்கள், பிரதமா் மோடியின் இலக்கை துரிதமாக அடைவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கி, சா்வதேச தரத்தில் விரிவான சட்டம் கொண்டுவரப்படும்’ என்று குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com