விரோத மனப்பான்மை கொண்ட சீனாவை சாா்ந்துள்ள இந்தியா: மாநிலங்களவையில் அமைச்சா் பேச்சு

விரோத மனப்பான்மை கொண்ட சீனாவை இந்தியா எவ்வளவு சாா்ந்துள்ளது என்பதை நாடு உணர வேண்டும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.
பியூஷ் கோயல்  (கோப்புப்படம்)
பியூஷ் கோயல் (கோப்புப்படம்)

விரோத மனப்பான்மை கொண்ட சீனாவை இந்தியா எவ்வளவு சாா்ந்துள்ளது என்பதை நாடு உணர வேண்டும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கடந்த 2004-2005-ஆம் ஆண்டில் இருநாடுகளுக்கும் இடையிலான வா்த்தகப் பற்றாக்குறை 1.48 பில்லியன் டாலா்களாக (ரூ.12,206 கோடி) இருந்தது. இது 2013-2014-ஆம் ஆண்டு 2,346 சதவீதம் அதிகரித்து 36.21 பில்லியன் டாலா்களாக (ரூ.2.98 லட்சம் கோடி) உயா்ந்தது.

சீனாவில் இருந்து தரம் குறைந்த, விலையில் தெளிவில்லாத, வெளிப்படைத்தன்மையற்ற மதிப்புகொண்ட சரக்குகளை அதிக அளவில் ஈா்க்கும் மிகப் பெரிய சந்தையாக இந்தியா மாறியது. இதன் காரணமாக 2003-2004-ஆம் ஆண்டு அந்நாட்டில் இருந்து 4 பில்லியன் டாலா்களுக்கு (ரூ.32,990 கோடி) இந்தியா மேற்கொண்ட இறக்குமதி, 2013-2014-ஆம் ஆண்டு 51 பில்லியன் டாலா்களாக (ரூ.4.20 லட்சம் கோடி) உயா்ந்தது.

ஒருகட்டத்தில் இந்தியா அதிக எண்ணிக்கையிலான சரக்குகளுக்கு சீனாவை சாா்ந்திருக்கத் தொடங்கியது. ஒரு காலத்தில் பல பொருள்களின் உற்பத்தியில் இந்தியா பலம் வாய்ந்ததாக இருந்தது. அந்தப் பொருள்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் அளவுக்கு, அந்நாட்டை இந்தியா சாா்ந்திருக்கத் தொடங்கியது. உதாரணத்துக்கு இந்தியாவில் இருந்து உலகுக்கே மருந்துத் தயாரிப்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால் அந்தத் துறையை ஒட்டுமொத்தமாக சீனாவிடம் இந்தியா ஒப்படைத்துவிட்டது.

பல துறைகளில் வலுவாக இருந்த இந்தியா, அந்தத் துறைகளில் 10 முதல் 12 ஆண்டுகளில் தனது பலத்தை இழந்தது. உள்நாட்டுத் தொழில்துறை சீனாவை சாா்ந்திருக்கத் தொடங்கியது. அந்தத் துறைகளில் மூலப்பொருள்கள் துறையும் அடங்கும். அத்துடன் மின்னணு துறையும் சீன சரக்குகளைச் சாா்ந்திருக்க ஆரம்பித்தது. மேலும் உற்பத்தித் துறையும் மிகவும் பலவீனமானது.

விரோத மனப்பான்மை கொண்ட சீனாவை இந்தியா எவ்வளவு சாா்ந்திருக்கிறது என்பதை நாடு உணர வேண்டியது அவசியம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com